Last Updated : 12 Apr, 2025 01:06 PM

 

Published : 12 Apr 2025 01:06 PM
Last Updated : 12 Apr 2025 01:06 PM

கோடையில் வறண்ட வனம்: விலங்குகளின் தாகம் தீர்க்கும் வனத்துறை!

வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டூர் வனப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடைக்காலத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கரிலும் மற்றும் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் 7,360 ஏக்கர் பரப்பளவிலும் வனம் அமைந்துள்ளது. மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில், சிறுத்தை, மான் இனங்கள், கழுதை புலி, நரி, மயில் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கோடை தொடங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

எனினும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை வனத்துறை அமைத்துள்ளது. தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால் மேற்கண்ட தொட்டிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக கிராமப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தேடி ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வனப்பகுதிகளில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிள் கூறியதாவது: கோடையில் வனங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கடுமையான வறட்சி காணப்படுகிறது. எனினும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. எனினும், வனவிலங்குகள் குடிநீருக்காக ஊருக்குள் புகுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீருக்காக வனத்திலிருந்து வெளியே வரும் மான்கள் தெருநாய்களிடம் சிக்கி காயமடைந்தும், சில இடங்களில் சாலையை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இதனால், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை தொடங்கியுள்ளோம். திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகிறோம். சுழற்சி முறையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. எனினும், கோடை மழை பெய்தால் மட்டுமே வனவிலங்குகளின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x