Published : 10 Apr 2025 08:52 PM
Last Updated : 10 Apr 2025 08:52 PM
சென்னை: வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், அதிநவீன கருவிகள் மூலமாக அந்நிய மரங்கள் அகற்றப்படுகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்த வனத்துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடர்ந்து பரந்து விரிந்துள்ள வனப்பகுதிகளில் நாட்டு மரங்களையும், மண் மற்றும் நீர் வளத்தையும் பாதிக்கும் வகையில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யூக்கலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை அகற்றக்கோரி சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் டி. சீனிவாசன், “தமிழக வனப்பகுதிகளில் அடர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, அதன்படி அந்நிய மரங்களை அகற்றுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஆண்டுக்கணக்கில் வேரூன்றியுள்ள அந்நிய மரங்களை அகற்ற அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டு அதன்மூலமாக அகற்றப்பட்டு வருகிறது என்றும், இதுதொடர்பான விவரங்கள் உடனுக்குடன் வனத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது,” எனக்கூறி அதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
மேலும், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 38 ஏக்கர் பரப்பில் வனப்பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்த உண்ணி செடிகளில், 3 ஆயிரத்து 605 ஏக்கர் பரப்பில் இருந்த உண்ணி செடிகள் அகற்றப்பட்டு விட்டது. அதேபோல வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சீமை அகத்தி, சீமை கருவேலம், யூக்கலிப்டஸ் போன்ற அந்நிய மரங்கள் சுமார் 20 ஆயிரத்து 339 ஏக்கர் பரப்பளவில் உள்ளதாக கண்டறியப்பட்டு, அவற்றையும் அழிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு மற்றும் வனத்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஏப்.25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT