Published : 01 Mar 2025 05:30 PM
Last Updated : 01 Mar 2025 05:30 PM
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 45 ஆண்டுகளாக குப்பை மேடாக மாறி போன நகராட்சி ஏரியை, தன்னார்வலர்கள் தூர் வாரி 1.48 லட்சம் டன் குப்பையை அகற்றி புத்துயிர் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியின் நீர் ஆதாரமாக 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிக்காச்சியப்பா ஏரி விளங்கியது. கடந்த 45 ஆண்டுகளாக நகராட்சியும், பொதுமக்களும், ஏரியில் குப்பை, கழிவுநீரை கொட்டி குப்பை மேடாக மாற்றினர்.
இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசியது. சுமார் 15 அடி உயரத்துக்கு குப்பை தேங்கி மலைபோல காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்த ஏரியை மீட்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து பிக்காச்சியப்பா ஏரி மீட்பு குழு உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. பின்னர் 2024-ம் ஆண்டு அக்.19-ம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் பிக்காச்சியப்பா ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.
அதன்படி, இந்த ஏரியில் இருந்த 1 லட்சத்து 48 ஆயிரம் டன் எடையுள்ள குப்பையை அகற்றியும், 4.5 கோடி லிட்டர் கழிவு நீரை உறிஞ்சியும் தூர்வாரப்பட்டது. இந்தப் பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த ஏரியை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு, திறந்து வைத்ததுடன், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், இளைஞர்களை பாராட்டினார்.
இதுகுறித்து ஏரி மீட்பு குழுவினர் கூறியது: பிக்காச்சியப்பா ஏரியை சுமார் 45 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த ஏரியை மீட்க குழு அமைத்து, பலரிடம் இருந்து ரூ.7.50 லட்சம் நிதி திரட்டப்பட்டது. தூர்வாரும் பணியின்போது ஏரியில் இருந்து 1.48 லட்சம் டன் குப்பை, 4.5 கோடி லிட்டர் கழிவுநீரை அகற்றி, குப்பையை நகராட்சி குப்பை கிடங்குக்கும், கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதுதவிர ஏரியில் குறுங்காடுகள் அமைத்துள்ளோம்.
இதற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிசெய்தன. மேலும், ஏரிக்கு நீர் கொண்டு வருவதற்கான வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏரியின் நுழைவாயில் மற்றும் கரையின் ஒரு பகுதியில் பூங்கா, நூலகம், பாதுகாப்பு வேலி, சிசிடிவி கேமராக்கள் அமைக்க உள்ளோம். பலரின் உழைப்பால் குப்பை மேடாக இருந்த இடம், புத்துயிர் பெற்று மீண்டும் ஏரியாக உருப்பெற்றுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT