Published : 26 Feb 2025 03:33 PM
Last Updated : 26 Feb 2025 03:33 PM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையோரம் மணல் குன்றுகளை பாதுகாக்கும் புதிய திட்டத்திற்காக பேரவைத் தலைவர் செல்வம் மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியை பொருத்தவரை 11 சதவீதத்துக்கு மட்டுமே காடுகள், மரங்கள் உள்ளன. இந்திய காடுகள் அறிக்கையின்படி குறைந்தபட்சம் 25 சதவீதம் பசுமை இருக்க வேண்டும். இந்த இலக்கை படிப்படியாக எட்டுவதற்காக 'பசுமை புதுச்சேரி' என்ற திட்டத்தை புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 5-ல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஒரு வீடு ஒரு மரம், நகர்ப்புற தோட்டங்கள், புதுச்சேரியின் பசுமையை அதிகரிக்க கிராமப்புற காடழிப்பு, கோயில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை பள்ளி வளாகங்கள், பசுமைத் தொழில் மற்றும் பசுமை அலுவலக வளாகங்கள் என 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் அடுத்த கட்டமாக மணல் குன்றுகளை பசுமையாக்கும் திட்டம் தொடங்கி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் இன்று நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்து கொண்டு கடற்கரை மணல் பகுதியில் மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அருள்ராஜன், மாசுக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் செயலர் ரமேஷ், அரியாங்குப்பம் தொகுதி வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கடற்கரையில் முந்திரி, வேப்பம், தென்னை, பின்னை உள்ளிட்ட 250 மரக்கன்றுகள் முதற்கட்டமாக நடப்பட்டுள்ளன. புதுச்சேரியை பொருத்தவரையில் வரலாற்று ரீதியாக மணல் குன்றுகள் கனகச்செட்டிக்குளம் முதல் மூர்த்திகுப்பம் கடலோரப் பகுதிகள் வரை தொடர்ச்சியான நீட்சியாக இருந்தது.
பிறகு நகரமயமாக்கல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக, புதுச்சேரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மணல் குன்றுகளின் பெரும்பகுதி மறைந்துவிட்டன. புதுச்சேரி கடலோரப் பகுதிகளின் தெற்குப் பகுதிகளான வீரம்பட்டினம், நல்லவாடு, புதுக்குப்பம், பானித்திட்டு, நரம்பை, பிள்ளையார்குப்பம், மணப்பட்டு மற்றும் மூர்த்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் மணல் குன்றுகள் காணப்படுகின்றன.
226.35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மணல் குன்றுகள் 1.5 மீட்டர் முதல் 9.57 மீட்டர் வரை உயரம் கொண்டவையாக உள்ளன. இந்த மணல் குன்றுகள் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மண்டலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரிய வகை தாவரங்கள், ஆமை, முயல், பாம்பு உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், ஊர்வனங்களின் வாழ்விடமாக இந்த மணல் குன்றுகள் இருக்கின்றன. இது கடலோர நீர் நிலைகளில் உப்பு நீர் ஊடுருவுவதைக் கட்டுப்படுத்துகிறது. வலுவான கடல் காற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது.
தற்போது இந்த மணல் குன்றுகள் மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் அழிக்கப்படும் சூழலுக்கு உள்ளாகியுள்ளது. இயற்கையின் இந்த புதுமையான உயிரினத்தைப் பாதுகாப்பது காலத்தின் தேவை. பல்லுயிர்களின் பெருக்கத்தை அதிகரிப்பதோடு காற்றால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்கும். இத்தகு திறப்பு மிக்க மணல் குன்றுகளை மீட்டெடுக்கவே இந்த புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை மூலம் சுற்றுச்சூழல் துறை இணைந்து இந்த திட்டத்தை மேற்கொள்கிறது. தொடர்ந்து இந்த திட்டம் படிப்படியாக மற்ற இடங்களில் தொடங்கி செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 5 சதவீதம் பசுமை அதிகரிக்கும் என நம்பிக்கை உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT