Published : 22 Feb 2025 07:58 PM
Last Updated : 22 Feb 2025 07:58 PM

முதன்முறையாக தீயணைப்பு வீரர்கள் 50 பேருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளித்த வனத்துறை!

வனத்துறை சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை: வனத்துறை சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு பாம்புகளை பிடிக்க பயிற்சியும், முதன்முறையாக பிரத்யேக உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்பு கடியால் 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த இறப்புகள், நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகிய நஞ்சு இன பாம்புகளால் ஏற்படுகிறது. இயற்கை வாழ்விடங்களை ஒட்டி மனித குடியிருப்புகள் இருப்பதால், மனித - பாம்பு மோதல்கள் தமிழகத்தில் பொதுவாக காணப்படுகிறது. வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துவிடும் சூழல்களில், அதை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனித - பாம்பு மோதல்களை தணிப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்க, முறையான பயிற்சி அவசியமாகிறது.

ஆனால், போதிய பயிற்சி இன்றி தீயணைப்பு வீரர்கள் இதுநாள் வரை பாம்புகளை மீட்டு வந்தனர். அண்மையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல மருத்துவமனை வளாகத்தில் பாம்பு பிடிக்க சென்ற தீயணைப்பு வீரர், பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்நிலையில் இந்து தமிழ் திசை நாளிதழின் ஜன.14-ம் தேதியிட்ட நாளிதழில் “குடியிருப்புக்குள் அச்சுறுத்தும் பாம்புகளை பிடிப்பது யார் பணி? - வனத்துறையா, தீயணைப்பு துறையா?” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதில், தீயணைப்பு வீரர்களுக்கு விஷ பாம்புகளை பிடிக்க போதிய பயிற்சியும் இல்லை, பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பதற்கான உபகரணங்களும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, வனத்துறை நிதியுதவியுடன், வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு ‘உயிரிழப்பின்றி பாம்புகளை மீட்பது’ என்ற தலைப்பில் ஒருநாள் செயல்முறை பயிற்சி கடந்த பிப்.21-ம் தேதி நடைபெற்றது. இதில் வண்டலூர் பூங்க இயக்குநர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று பயிற்சியை தொடங்கிவைத்தார்.

இப்பயிற்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வன உயிரினத் துறை தலைவர் ஸ்ரீகுமார் பங்கேற்று பாம்புகளின் பண்பு, இனம் கண்டறிதல், பாதுகாப்பு, பாம்பு கடிக்கு முதலுதவி மற்றும் பாம்புக்கடிக்கான சிகிச்சை குறித்து விளக்கினார்.

கர்நாடக மாநிலம் அகும்பேவில் உள்ள கலிங்கா அறக்கட்டளை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர்.கணேஷ், நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற பாம்புகளை கண்டறிதல், அவற்றை கையாள்வது மற்றும் அவற்றை வனங்களில் விடும் மறுவாழ்வு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.

பிற்பகலில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு நஞ்சு மற்றும் நஞ்சற்ற பாம்புகளை கையாள்வது குறித்து நேரடி கள செயல்முறை பயற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற 50 தீயணைப்பு வீரர்களுக்கும், வனத்துறை சார்பில் முதன்முறையாக தலா ரூ.10 ஆயிரம் செலவில் பாம்பு பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த பயிலரங்கில் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநர் ஏ.உதயன், துணை இயக்குநர்கள் எஸ்.செண்பகப்பிரியா, டி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x