Published : 30 Jan 2025 09:02 PM
Last Updated : 30 Jan 2025 09:02 PM
தூத்துக்குடி: கடல்சார் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் கடல் ஆமைகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு வனத்துறை சார்பில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை, தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் இன்று (ஜன.30) நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன் வரவேற்று பேசுகையில், கடல் ஆமைகள் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. எனவே, கடல் ஆமைகளை பாதுகாக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு பகுதியில் 2, குலசேகரன்பட்டினம் பகுதியில் 1 என மூன்று கடல் ஆமை குஞ்சு பொறிப்பகங்களை வனத்துறை சார்பில் ஏற்படுத்தியுள்ளோம். இங்கு 1,800 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 1,500 குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
கடல் ஆமைகள் மீனவர்களுக்கு நல்ல நண்பன். கடலில் உள்ள ஜெல்லி மீன்கள் போன்றவற்றை சாப்பிட்டு நல்ல மீன்பிடி தளத்தை மீனவர்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது. எனவே, கடல் ஆமைகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மீனவர்கள் தங்கள் வலைகளில் தெரியாமல் கடல் ஆமைகள் சிக்கிக் கொண்டால் அவைகளை பாதுகாப்பாக கடலில் விட்டுவிட வேண்டும்.
கடல் ஆமைகளை பாதுகாப்பதில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக தான் வனத்துறையினர், காவல் துறையினர், மீன்வளத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீனவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி பட்டறையில் கடல் ஆமைகளை எவ்வாறு அடையாளம் காணுவது, அதனை எவ்வாறு பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றார் அவர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசுகையில், நமது உணவு சங்கிலியில் கடல் ஆமைகள் மிகவும் முக்கியமானவை. அதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கடல் ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, தூத்துக்குடி கோட்டாட்சியர் ம.பிரபு, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி லவ்சன் எட்வர்டு, மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து கடல் ஆமைகளின் முக்கியத்துவம், அதனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, கடல் சுற்றுச்சூழல் நிபுணர் கதிரேசன், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற துணை வன பாதுகாவலர் தாமஸ் தனிஸ்லாஸ் டீரோஸ் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்.
பயிற்சி பட்டறையில் வனத்துறையினர், காவல் துறையினர், மீன்வளத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு துறையினர், மீனவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT