Published : 24 Jan 2025 05:03 PM
Last Updated : 24 Jan 2025 05:03 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை காலதாமதமாக பெய்ததால் பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் வரத்து இல்லை. அதனால் பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், நயினார்கோவில் ஒன்றியம் தேர்த்தங்கல் கண்மாய், கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் கண்மாய்கள், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம் கண்மாய்கள், ராமநாத புரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இனப்பெருக்கத்துக்காக பறவைகள் வருவது வழக்கம்.
குறிப்பாக தாழைக்கொத்தி, செங்கால் நாரை, நத்தை கொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோ வால்பவர், ஆஸ்திரேலிய பிளமிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைக்கிடா உள்ளிட்ட 50 வகைகளுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து செல்லும். இதனைப் போன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, தொண்டி காரங்காடு அலையாத்தி காடு, வாலிநோக்கம் கடல் தரவை மற்றும் தனுஷ்கோடி கடல் தீவு பகுதிகளில் பிளமிங்கோ, நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல்திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரை, கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான மைல் தூரம் கடல் கடந்து பறவைகள் இங்கு வருவது வழக்கம்.
இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டு கருவேல மரங்கள் உள்ளிட்ட மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, பின்னர் குஞ்சுகளுடன் பறந்து செல்லும். இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் கண்மாய்களில் நீர் நிரம்பியதால் சரணாலயப் பகுதிகளில் 40 வகைகளுக்கும் மேலான பறவைகளும், தீவு பகுதிகளில் 75 ஆயிரம் பறவைகளும் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்தாண்டு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. அதனால் கண்மாய்கள், நீர்நிலைகளில் நீர் தேங்கவில்லை. நவம்பர் இறுதியில் இருந்துதான் கனமழை பெய்யத் தொடங்கியது. குறித்த காலத்தில் பருவ மழை தொடங்காததால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது மிகவும் குறைந்தது. அதன் பின்னர் மழை பெய்தும், வைகை தண்ணீர் மூலம் பறவைகள் சரணாலய கண்மாய்கள் நிரம்பியும் பறவைகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடியே கிடக்கிறது.
தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் மட்டும் குறைந்தளவில் பறவைகள் உள்ளன. அதனால் பறவை ஆர்வலர்களும், பொதுமக்களும் பறவைகள் சரணாலயங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் நகருக்கு அருகில் அமைந்துள்ளதால், பறவைகள் அதிகம் வரும்போது ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களில் அதிகம் பேர் வந்து பறவைகளை ரசித்து செல்வர். ஆனால் இந்தாண்டு வெளிமாநில, வெளிநாட்டு பறவைகள் வராததால் இப்பகுதி மக்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT