Published : 22 Jan 2025 06:48 PM
Last Updated : 22 Jan 2025 06:48 PM
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று (ஜன.22) ஆய்வு மேற்கொண்டனர்.
கடல் அரிப்பு: திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதி கடந்த 2 மாத காலமாக கடுமையான கடல் அரிப்பை சந்தித்து வருகிறது. இதனால் கோயில் முகப்பில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்துக்கும், சுமார் 8 அடி ஆழத்துக்கும் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை வேகமாக சுருங்கி வருவது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடல் அரிப்பில் இருந்து திருச்செந்தூர் கோயில் கடற்கரையை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எம்.பி, அமைச்சர்கள் ஆய்வு: இதையடுத்து தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடந்த 18-ம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஐஐடி குழு: அதன்படி திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐஐடி மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (என்சிசிஆர்) ஆகியவற்றுக்கு தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பேரில் ஐஐடி குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் நேற்று விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். கடல் அரிப்புக்கான காரணம், கடல் அரிப்பின் அளவு, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர்.
9 விஞ்ஞானிகள் குழு: இதன் தொடர்ச்சியாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் இன்று திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் கடற்கரை பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு நடத்தினர். பின்னர் விஞ்ஞானி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் திடீரென அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என கண்டறிவதற்காக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் இருந்து எனது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளோம்.
இன்று முதற்கட்ட ஆய்வை நடத்தியுள்ளோம். நாளை (ஜன. 23) டிரோன் மூலம் விரிவான ஆய்வு நடத்தி சில தகவல்களை சேகரிக்கவுள்ளோம். அதன் பிறகு முடிவுகள் குறித்து எங்கள் மையத்தின் இயக்குநரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, வரும் 25-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அறிக்கையை சமர்பிக்கப்போம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடலோர மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக வரைவு தயார் செய்து கொடுக்கும் பணியை எங்கள் மையம் செய்து வருகிறது. குறிப்பாக வெள்ளம், கடல் அரிப்பு போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்ன வழிகள் என்பது தொடர்பான அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து மேலாண்மை திட்டங்களை நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.
எங்கள் மையம் சார்பில் கடந்த 1990 முதல் 2022 வரை செயற்கைகோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரை 33 சதவீதம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் எங்களது மையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இயற்கைக்கு, அதன் போக்கில் ஏதாவது தடை ஏற்பட்டால், ஒரு இடத்தில் கடல் அரிப்பும், மற்றொரு இடத்தில் மணல் சேர்க்கையும் நிகழும். இது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு. திருச்செந்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் தாக்கம் அதிகரிப்பு, புயல், சூறாவளி போன்றவை அடிக்கடி ஏற்படுதல், கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைத்தல் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மீன்வளத்துறை கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த ஆய்வை நடத்துகிறோம். இந்த ஆய்வில் அறிவியல் ரீதியிலாக கிடைக்கும் தகவல்களை சமர்பிபிப்போம். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நீண்ட கால ஆய்வு தேவை என கேட்டுக் கொண்டால் தொடர்ந்து ஆய்வு செய்வோம்'' என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT