Last Updated : 22 Jan, 2025 03:44 PM

 

Published : 22 Jan 2025 03:44 PM
Last Updated : 22 Jan 2025 03:44 PM

புட்லூர் தடுப்பணை அருகே கூவம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர்!

ஆற்றில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் கழிவுகள்.

கூவம் ஆற்றில் புட்​லூர் தடுப்பணை அருகே மழைநீர் வடிகால்​வாய் மூலமும் நேரடி​யாக​வும் கழிவுநீர் கலப்​ப​தால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக பொது​மக்கள் குற்​றம்​சாட்டு​கின்​றனர். திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று கூவம். ராணிப்​பேட்டை மாவட்​டம், கேசாவரம் கிராமத்​தில் கல்லாற்றின் குறுக்கே உள்ள அணைக்​கட்​டிலிருந்து உருவாகும் இந்த ஆறு, 72 கி.மீ. பயணித்து, சென்னை​யில் நேப்​பியர் பாலம் அருகே வங்காள விரி​குடாகடலில் கலக்​கிறது.

இந்த ஆறு, திரு​வள்​ளூர், பூந்​தமல்லி மற்றும் ஆவடி வட்ட பகுதி​களின் விவசாய நிலங்​களின் முக்கிய நீர் ஆதார​மாக​வும், அப்பகு​தி​களின் குடிநீர் ஆதார​மாக​வும் விளங்​கு​கிறது. இந்நிலை​யில், திரு​வள்​ளூர் அருகே கூவம் ஆற்றில் புட்​லூர் தடுப்பணை அருகே மழைநீர் வடிகால்​வாய்கள் மூலமும், நேரடி​யாக​வும் கழிவுநீர் விடப்​படு​வ​தால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது என பொது​மக்கள் குற்​றம்​சாட்டு​கின்​றனர்.

இதுகுறித்து, பொது​மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரி​வித்​த​தாவது: திரு​வள்​ளூர் அருகே உள்ள புட்​லூர், ஜமீன்​கொரட்​டூர், புதுசத்​திரம் உள்ளிட்ட பகுதி​களைச் சேர்ந்த விவசா​யிகள் கூவம் ஆற்று பாசனத்தை நம்பியே பயிர் சாகுபடி​யில் ஈடுபட்டு வருகின்​றனர்.

இவர்​களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு புட்​லூரில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.89 கோடி மதிப்​பில் தடுப்பணை கட்டியது. இந்த தடுப்​பணை​யில் ஆண்டு​தோறும் பருவ​மழை​யின்​போது கூவம் ஆற்றில் பெருக்​கெடுத்து ஓடும் மழைநீர் தேக்கி வைக்​கப்​படு​வ​தால் விவசா​யிகள் பலனடைந்து வருவதோடு, புட்​லூர் மற்றும் அதன் சுற்று​வட்டார பகுதி​களில் நிலத்தடி நீர் மட்ட​மும் உயர்ந்து வருகிறது.

இந்நிலை​யில், புட்​லூர் தடுப்பணை அருகே உள்ளது வெங்​கத்​தூர் ஊராட்சி. சுமார் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மக்கள் வசிக்​கும் இந்த ஊராட்​சிக்​குட்​பட்ட மணவாளநகர், ஒண்டிக்​குப்பம் உள்ளிட்ட பகுதி​களில் சுமார் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடி​யிருப்புகள் மற்றும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட உணவு விடு​தி​கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறு​வனங்கள் உள்ளன.

இவைகளில் இருந்து வெளி​யேறும் கழிவுநீர், நீண்ட காலமாக மழைநீர் வடிகால்​வாய்​களில் விடப்​படு​கின்றன. அவ்வாறு விடப்​படும் கழிவுநீர் மழைநீர் வடிகால்​வாய்கள் மூலம் திரு​வள்​ளூர் ரயில் நிலையம் அருகே மணவாளநகர் உள்ளிட்ட பகுதி​களில் கூவம் ஆற்றில் விடப்​படு​கிறது.

மேலும் மணவாளநகர், ஒண்டிக்​குப்பம் உள்ளிட்ட பகுதி​களில் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள வீடு​களில் இருந்து நேரடியாக கூவம் ஆற்றில் கழிவுநீர் விடப்​படு​கிறது. இதுதவிர ஆடு, மாடு, இறைச்சி கழிவுகளை வியாபாரிகள் மற்றும் பொது​மக்கள் கூவம் ஆற்றில் கொட்டி வருகின்​றனர். திரு​வள்​ளூர் நகராட்சி கழிவு நீர் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​துக்கு நாள்​தோறும் வரும் சுமார் 50 லட்சம் லிட்டர் கழிவு நீரில் கணிசமான அளவு சுத்​தி​கரிக்​கப்​படாமல் புட்​லூர் ஏரி வழியாக கூவம் ஆற்றிலேயே விடப்​படு​கிறது.

இதனால், புட்​லூர் தடுப்​பணையை ஒட்டி​யுள்ள புட்​லூர், ஒண்​டிக்​குப்​பம் உள்​ளிட்ட பகு​தி​களில் நிலத்தடி நீர் ​மாசடைந்து வரு​கிறது. இதனால் சு​கா​தார சீர்​கேடு ஏற்​படும் அபா​யம் உள்​ளது. இதனை தடுக்க அரசு உரிய நட​வடிக்கை எடுக்க வேண்டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x