Published : 17 Jan 2025 10:16 AM
Last Updated : 17 Jan 2025 10:16 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஒரு வார தீவிர தூய்மைப் பணியில் 5 ஆயிரத்து 323 டன் கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையை உறுதி செய்ய அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியை மேயர் ஆர்.பிரியா கடந்த ஜன.7-ம் தேதி தொடங்கிவைத்தார். கடந்த 13-ம் தேதியுடன் தீவிர தூய்மைப் பணி நிறைவடைந்தது இதில் மொத்தம் 5 ஆயிரத்து 323 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
மீதம் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்களில் இன்று (ஜன.17) முதல் தீவிர தூய்மைப்பணி நடைபெற உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT