Published : 12 Jan 2025 06:21 PM
Last Updated : 12 Jan 2025 06:21 PM

குந்தா பகுதியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது! 

மஞ்சூர்: குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் பிடிபட்டது. இந்த கரடி தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை புலி, காட்டுமாடு, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. தீவன பற்றாக்குறை, வன விலங்குகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குந்தா மற்றும் மஞ்சூர் பஜார் பகுதியில் நடமாடி வந்த கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி வந்தது. மேலும் அந்தப் பகுதியில் சிறுத்தைகள் சுற்றி தெரியும் வீடியோவும் கடந்து சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், மஞ்சூர் அடுத்த எடக்காடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற ரங்கசாமி (32) சமீபத்தில் வேலை முடிந்து இயற்கை உபாதைக்காக தேயிலைத் தோட்டம் அருகில் உள்ள பகுதிக்கு சென்றபோது கரடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று உறவினர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

தெப்பக்காடு வனப்பகுதியில் விடுவிப்பு: இதைத் தொடர்ந்து எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டது. மேலும் கரடி நடமாட்டத்தை அறிய 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கூண்டில் கரடி சிக்கியது.

இதைத்தொடர்ந்து குந்தா வனசரகர் சீனிவாசன் மற்றும் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து கரடியை மீட்டு தெப்பக்காடு வனச்சரகத்தில் உள்ள மஞ்சகடம்பை குளம் என்ற பகுதியில் இன்று காலை விடுவித்தனர். குந்தா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி சிக்கியதால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x