Last Updated : 04 Jan, 2025 09:22 PM

 

Published : 04 Jan 2025 09:22 PM
Last Updated : 04 Jan 2025 09:22 PM

தமிழகத்தில் 2024-ல் மட்டும் 123 யானைகள் உயிரிழப்பு!

கோவை: தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த 2024 மே மாதம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 3,063 யானைகள் இருப்பதாக அரசு அறிவித்தது. அதிகபட்சமாக நீலகிரி மலைப் பகுதிகளில் 2,253 யானைகள் வாழ்கின்றன. அடுத்ததாக கோவை வனப்பகுதியில் 323, ஆனைமலையில் 310, ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் 227, அகஸ்தியமலையில் 259 யானைகள் உள்ளன.

யானைகள் நோய் தாக்குதலால் இறப்பதும், மனிதர்கள் அமைக்கும் மின்வேலி, அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்தல், தந்தத்துக்காக கொல்லுதல் ஆகியவற்றாலும் யானைகள் மரணித்து வருகின்றன. அதேவேளையில் தமிழக அரசு யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் சராசரியாக உயிரிழந்து வருகின்றன. அந்தவகையில் 2024-ம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்திருப்பதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையான முறையில் 107 யானைகளும், இயற்கைக்கு மாறான முறையில் 16 யானைகளும் உயிரிழந்துள்ளன. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை சரகத்தில் 1, கோவை சரகத்தில் 1, மேட்டுப்பாளையம் சரகத்தில் 2, சிறுமுகை சரகத்தில் 3 என மொத்தம் 7 யானைகள் உயிரிழந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வனத்துறை புள்ளிவிவரத்தின்படி 2020-ல் 119, 2021-ல் 115, 2022-ல் 117, 2023-ல் 129 யானைகளும் உயிரிழந்துள்ளன. இத குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியது: “இந்தியாவில் 27,000 முதல் 30,000 யானைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் 3063 என்ற எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஆண் யானைகள் 5000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. ஒரு பெண் யானை கர்ப்பமாகி குட்டி போட 6 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது பெண் யானை தன் வாழ்நாளில் 4 முதல் 5 முறை குட்டி போடுகிறது.

யானைகள் எண்ணிக்கை உயர்வதில் ஆண் யானைகள் முக்கியம். ஆனால், தந்தத்துக்காக ஆண் யானைகள் கொல்லப்படுகிறது. விவசாய பயிர்களை காக்க அமைக்கப்படும் மின்வேலியில் சிக்கி ஆண் யானைகள் இறப்பதால் யானைகள் எண்ணிக்கை பெரிதும் பாதிக்கும் நிலை உள்ளது. சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் அதிக நிதி ஒதுக்கி கண்காணிப்பு மேற்கொள்வதால் அங்கு யானைகள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

குறிப்பாக கோவை, ஈரோடு போன்ற காப்புக்காடுகளில் வாழும் யானைகளை பாதுகாக்க கூடுதலாக நிதி ஆதாரம் தேவை.அரசு எடுக்கும் பல்வேறு முன்முயற்சிகளால் ரயில், பேருந்துகளில் சிக்கி யானைகள் இறப்பது குறைந்துள்ளது. காட்டுப்பன்றிகளுக்கு தீர்வு காணாமல் அவுட்காய் போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.மனித-விலங்கு மோதல் பகுதிகளில் எம்மாதிரியான பயிர்களை விவசாயம் செய்தல் என்பதை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிடம் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

யானைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதத்துக்கு விரைவாக இழப்பீடு தர வேண்டும். மலைப் பகுதிகளில் புதிய பாதைகள் அமைக்க கூடாது. மாறாக உயர் மட்ட பாதைகள் அமைக்க வேண்டும். யானைகள் வாழ்விடம் சுருங்கிவரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

யானைகள் இறப்பைப் பொறுத்தவரை வனத்தை விட்டு வெளியேறி பூச்சிக்கொல்லி தெளித்த பயிர்களை சாப்பிடுவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதிய ஊட்டச்சத்து கிடைக்கிறதா, தண்ணீர் கிடைக்கிறதா, வறட்சி காலங்களில் சீமைக்கருவேலம் மரங்களை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.யானைகள் பிறப்பின் விகிதத்தைவிட யானைகள் இறப்பு விகிதம் அதிகரிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x