Last Updated : 24 Dec, 2024 07:44 PM

 

Published : 24 Dec 2024 07:44 PM
Last Updated : 24 Dec 2024 07:44 PM

கோவை அருகே பெண் யானை உயிரிழப்பு - 2 மாத குட்டியை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி!

கோவையை அடுத்த பன்னிமடை அருகே உயிரிழந்த பெண் யானையை  கிரேன் மூலம் மீட்ட வனத்துறையினர்.

கோவை: கோவையை அடுத்த பன்னிமடை காப்புக்காடு அருகே அமர்ந்த நிலையில் பெண் யானை உயிரிழந்த நிலையில், 2 மாத குட்டியை மீட்ட வனத்துறையின் யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இந்த நிலையில் தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் நேற்று இரவு புகுந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இந்நிலையில் இன்று (டிச.24) காலை கூட்டத்தில் இருந்து பிறந்து 2 மாதங்களே ஆன குட்டி ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர். மேலும் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்த கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வன கால்நடை மருத்துவர் சுகுமார், கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த யானை அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டது. மேலும் முக்கிய உடல் பாகங்கள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சுமார் 30 முதல் 32 வயதுமிக்க பெண் யானையின் உள் உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு கீழே விழுந்துள்ளது. மீண்டும் எழ முயற்சிக்கும்போது நாய் போன்று அமர்ந்துள்ளது. இதனால் யானையின் எடை முழுவதும் மார்பு பகுதிக்கு வந்து தரையில் பட்டுள்ளது. நீண்ட நேரம் எழ முடியாத நிலையில் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. பெண் யானையின் மடியில் பால் வடிந்ததால் குட்டி யானையின் தாய் என்பது தெரியவந்துள்ளது” என்றனர்.

இதனிடையே பொன்னூத்து அம்மன் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டத்துடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x