Published : 11 Dec 2024 03:48 PM
Last Updated : 11 Dec 2024 03:48 PM
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகரில் இருந்து புது ஆவடி சாலையை இணைக்கும் இணைப்பு பாலம் 1998-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மேம்பாட்டு நிதியின் மூலம் 2010-ம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது.
இந்த பாலமானது ரெட்டேரியில் இருந்து கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் நோக்கி செல்லும் மெட்ரோ குடிநீர் குழாய்களின் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே சென்னை மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் இடம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சக்கரவர்த்தி பாலத்தின் இருபுறமும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. பாலம் அருகில் உள்ள சக்கரவர்த்தி நகர், காமராஜர் தெரு, தந்தை பெரியார் நகர் பிரதான சாலைகளில் வசிப்போரின் குப்பை கொட்டும் இடமாக பாலம் மாறி வருகிறது.
இது சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான இடம். பொதுமக்கள் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை இங்கு கொட்டக்கூடாது. அத்துமீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை பாலத்தின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி, தினந்தோறும் பொதுமக்கள் குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும், கட்டிட கழிவுகளையும் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதுமட்டுமின்றி பாலத்தின் ஒருபுறம் குட்டைபோல் கழிவுநீர் தேங்கிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதில் ஏராளமான குப்பை கழிவுகளும், சமீபத்தில் இறந்துபோன நாயின் அழுகிய உடல் போன்றவையும் தண்ணீரில் மிதக்கின்றன. அருகில் உள்ள மாநகராட்சி உரம் தயாரிக்கும் இடங்களில் சுற்றித்திரியும் மாடுகள், குட்டையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அருந்தி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இது சுகாதார சீர்கேடுக்கும் வழிவகுக்கும்.
இதுதொடர்பாக வில்லிவாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், “சக்கரவர்த்தி நகர் பாலம் சமீபகாலமாக குப்பை கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் அருகே மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டை, சில சமயங்களில் குடிநீருடன் கலந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மழைபெய்யும் காலங்களில் கூடுதலாக தேங்கும் கழிவுநீரானது அச்சத்தை அதிகப்படுத்துகிறது.
ரெட்டேரியில் இருந்து கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் வழியாக செல்லும் மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் தேங்கும் கழிவுநீர், குடிநீரில் கலந்து ஆபத்தை விளைவிக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு, அயனாவரம் சக்கரவர்த்தி நகர் பாலத்தில் பொதுமக்கள் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் குட்டைபோல் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், கால்நடைகள் கழிவுநீரை குடிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT