Last Updated : 10 Dec, 2024 12:21 AM

 

Published : 10 Dec 2024 12:21 AM
Last Updated : 10 Dec 2024 12:21 AM

யானை - மனித மோதலை தடுக்க குடியிருப்புகளில் வாழை பயிரிட கூடாது: தேயிலை தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்

வால்பாறை தேயிலை தோட்டப் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானை கூட்டம்.

பொள்ளாச்சி: தமிழக - கேரள எல்லையில் வால்பாறை நகரம் அமைந்துள்ளது. தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இந்த நகரம் உள்ளதால், மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழைக்கு பின்னர், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்களின் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா, கொய்யா ஆகியவற்றை உட்கொள்கின் றன. சில நேரங்களில் தேயிலை தோட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் மளிகை, ரேஷன் கடைகளையும் இடித்து சேதப்படுத்துகின்றன. இதனால், வால்பாறையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வரு கின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர் வனத்துறையினரை யும், தமிழக அரசையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எஸ்டேட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்: இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனத்துறையின் தீவிர நடவடிக்கையால், சமீப காலமாக யானை - மனித மோதல் வெகுவாகக் குறைந்துள்ளது. யானைகள் நடமாடும் பகுதி குறித்து சம்பந்தப்பட்ட எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ வாயிலாக முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. இரவு நேரங்களில், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையாமல் இருக்க, அங்கு வாழை பயிரிடுவதை தொழிலாளர்கள் தவிர்க்கவேண்டும். இதுகுறித்து அனைத்து எஸ்டேட் நிர்வாகத்துக்கும் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், யானைக்கு மிகவும் பிடித்தமான அரிசியை தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்க வேண்டும். யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, தொழிலாளர்கள் விழிப்புணர்வு டன் நடந்து கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச் சரகங்களில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறைநிலங்களில் யானைகள் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடங்களை மறித்து அனுமதி இன்றி தங்கும் விடுதிகள், கட்டிடங்கள், ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் மற்றும் உணவுக்காக இடம் பெயரும் யானைகள், வழிமாறி சென்று குடியிருப்பு பகுதியிலும், தேயிலை தோட்டத்திலும் முகாமிடுகின்றன. வன விலங்கு - மனித மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வால்பாறையில் யானைகளை பாதுகாக்கும் வகையிலும், இங்குள்ள இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டு உள்ள தங்கும் விடுதிகளை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து அகற்ற வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x