Published : 05 Dec 2024 04:55 PM
Last Updated : 05 Dec 2024 04:55 PM
கோத்தகிரி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக 95 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக, கானுயிர்கள் பாதுகாப்பு தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. தலைமை ஆசிரியை சரோஜா தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும், லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலாளருமான கே.கே.ராஜூ பேசும்போது, "மனித குலம் தோன்றிய நாளில் இருந்து வன விலங்குகளை அழிப்பதே, வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது. தற்போது, உலகில் உள்ள உயிரினங்களில் 10 சதவீதம் மட்டுமே வன விலங்குகள். மனிதர்களால் தங்கள் தேவைக்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு உயிரினங்கள் 70% உள்ளன.
யானைகள் தந்தங்களுக்காகவும், புலிகள் அதன் பற்கள், எலும்புகளுக்காகவும் பெருமளவில் கொல்லப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘பூமியையும் மக்களையும் இணைத்தல் - கானுயிர் பாதுகாப்பில் டிஜிட்டல் பயன்பாடு’ என்பதாகும். அதாவது, நவீன கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன விலங்குகள் குறித்து ஆய்வு செய்தல், வலசை செல்லும் திசையை செயற்கைக்கோள் துணையுடன் கண்டறிதல், சில விலங்குகளை அவற்றின் மரபணு ஆய்வு மூலமாக மீட்டெடுத்தல் என, டிஜிட்டல் துணை கொண்டு விலங்குகளை காக்க வேண்டும் என்பதாகும்.
காடுகளை அழிப்பதன் மூலமாக, வன விலங்குகளின் வாழ்வாதாரமும், வாழிடமும் அழிக்கப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், தகவல் அறியும் சட்டத்தின்படி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக 95 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடு சபையின் தலைவர் கூறுவதுபோல், நாம் இயற்கையை சார்ந்துள்ளோம். தற்போது இயற்கை நம்மை சார்ந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.
இயற்கையை புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ வேண்டும், மற்ற உயிர்களையும் வாழவிட வேண்டும்" என்றார். பின்னர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோத்தகிரி அரிமா சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை பீனா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT