Published : 16 Sep 2024 05:22 AM
Last Updated : 16 Sep 2024 05:22 AM
கோவை: ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ம் தேதி ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பூமியை சுற்றும் மிக மெல்லிய படலம் ஓசோன் படலம் எனப்படுகிறது.
ஓ3 எனப்படும் இந்த ஓசோன் படலம், மூன்று ஆக்சிஜன் அணுக்களினால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும். பூமியின் பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மைல்களில் இருந்து31 மைல்கள் வரை இவை காணப்படுகின்றன. கடந்த 1985 முதல் 1988 வரை தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர்கள் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட சிதைவை கண்டறிந்தனர். ஓசோன் படலம் சிதைவுக்கு பல காரணங்கள் உள்ளன. குப்பையில் இருந்து வரும் மீத்தேன் வாயு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, தேவையற்ற பொருட்களை மண்ணில் போட்டு எரிப்பதால் வெளிவரும் புகை போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் ஓட்டையின் வழியாக புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாக வந்தடைகின்றன. இதனால்பூமியில் வாழும் உயிரினங்களுக்கு தோல் புற்றுநோய், கண்பார்வை கோளாறு உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கோவையைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் ஜோஷி வி.செரியன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: 1990-களில் நான் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போது, பெரிய தொழிற்சாலைகள், தென்னை நாரில் இருந்து மீதமான நார்க்கழிவுகளை தீ வைத்து எரித்து அழித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதை பார்த்தேன். இதையடுத்து, நார்க்கழிவை மறுசுழற்சி செய்து பயனுள்ள பொருளாக மாற்ற ஆராய்ச்சி செய்தேன். நார்க்கழிவை மறுசுழற்சி செய்து துகள் வடிவில் செடி வளருவதற்கு ஏற்ற துகளாக கண்டறிந்தேன். மேலும் இதில் ஆராய்ச்சி செய்து இவை தாவரங்கள் வளருவதற்கு ஏற்ற உரமாக மாற்றினேன். இதற்கு வரவேற்பு கிடைத்ததால், ஒரு நிறுவனத்தின் துர்நாற்றம் வீசக்கூடிய எலும்புக்கழிவை மக்க வைத்து சூப்பர் உரமாக மாற்றினேன். உலக வெப்பமயமாதல், பருவகால மாற்றம், மழை குறைவுபோன்றவற்றுக்கு மரங்கள் எண்ணிக்கை குறைவு மட்டும் காரணம்அல்ல. பசுமை இல்ல வாயுக்களும் முக்கிய காரணமாகும்.
பல நகரங்களில் குப்பை மேடுகள் உருவாகி, மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது. சூரிய ஒளி பூமிக்கு வரும்போது 3 விதமான ரேடியேஷன் உள்ளது. ஒன்று, அல்ட்ரா வைரல் ரேடியேஷன். இரண்டாவது, நாம் பார்க்கும் வகையிலான விப்ஜியார் ரேடியேஷன். மூன்றாவது, ஆற்றல் குறைந்த இன்ப்ரா ரெட் ரேடியேஷன். இதில் ஓசோன் படலம் அல்ட்ரா வைரல் ரேடியேஷனை தடுக்கிறது. இந்த ரேடியேஷன் நம் மீது நேரடியாக படும்போது பாதிப்பு ஏற்படும். மீத்தேன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் இன்ப்ரா ரெட்ரேடியேஷனில் உள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டுமீண்டும் வெளியிடும். இதனால் மண் வெப்பமயமாகி மண்வளமும் பாதிக்கப்படும். எனவே, குப்பையை கழிவு மேலாண்மை முறையில் அழிக்கும் போது, அதிலிருந்து மீத்தேன் வாயு வெளியேறுவதை தடுக்கலாம்.
மக்கும் குப்பையில், நுண்ணுயிர்களை இட்டு, குறிப்பிட்ட நாட்கள் மக்கச் செய்வதன் மூலம் அதை இயற்கை உரமாக நாமே மாற்றிவிடலாம். நுண்ணுயிர்களை கலப்பதன் மூலம் அதிலிருந்து துர்நாற்றம் வெளியேறுவது தடுக்கப்படும். இதை நாம் தொடர்ச்சியாக செய்யும்போது, குப்பை ஓரிடத்தில் மலை போல் குவிவதும் தடுக்கப்படும்.எனவே, ஓசோன் படலம் பாதுகாப்பு தினமான செப்டம்பர் 16-ம் தேதி நாம் உறுதி பூண்டு, கழிவை உரிய முறையில் உரமாக்கி அகற்றுவோம் என்பதைஉறுதியாக ஏற்று செயல்படுத்தும்போது, ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை நம்மால் இயன்ற வரையில் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
(செப்டம்பர் 16 - ஓசோன் பாதுகாப்பு தினம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT