Published : 20 Jun 2024 08:43 AM
Last Updated : 20 Jun 2024 08:43 AM
சென்னை: மெரினா கடற்கரையில் நேற்று மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து வந்த மீன்வளத் துறை அதிகாரிகள், மீன்கள் இறப்புக்கான காரணத்தை அறிய மீன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து மாநகராட்சி உதவியுடன் இறந்த மீன்களை அகற்றினர்.
கடலில் மீன்கள் திடீரென இறந்து, கரை ஒதுங்கியது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. திருவொற்றியூரில் 9 செமீ, அண்ணாநகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், திரு.வி.க.நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 7 செமீ மழை பெய்துள்ளது.
தாம்பரம், குன்றத்தூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில் பெய்த மழைநீர் கூவம் மற்றும் அடையாற்றின் வழியாகத்தான் வடிகின்றன. அவ்வாறு நீர் கடலில் முகத்துவாரப் பகுதியில் கலக்கும்போது, கடல் நீரில் ஆக்சிஜன் செறிவு குறையும்.
மேலும் குளிர்ந்த புதிய நீர், வெப்பமான கடல் நீரில் கலக்கும்போது, வெப்பநிலை மாற்றம் அடைகிறது. இதன் தாக்கத்தால் மீன்கள் இறந்திருக்கும். அதிக அளவில் மழைநீர் கடலுக்கு வரும்போது, இதுபோன்று மீன்கள் இறப்பது இயல்பான ஒன்றுதான். இருப்பினும் வேதிப் பொருட்களால் இறப்பு ஏற்பட்டுள்ளதா என அறிய, மீன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT