Published : 17 Jun 2024 07:05 AM
Last Updated : 17 Jun 2024 07:05 AM

2.15 லட்சம் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டு தமிழக வனத் துறை சாதனை

கோப்புப்படம்

ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் 2,58,775 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அவற்றிலிருந்து 2,15,778 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர்.

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை, கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது.

ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை கடல் ஆமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன. 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரைப் பகுதியில்,ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை, லெதர்பேக் ஆமைஎன 5 வகையான ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் முட்டைகள் இடுவதற்காக வருகின்றன. இதில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

இந்த முட்டைகள் நாய்கள், பறவைகள் மற்றும் மனிதர்களால் சேதமடைவதைத் தடுக்கும் விதமாக, அவற்றை வனத் துறையினர் சேகரித்து மீனவர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சுப் பொரிப்பகங்களில் அடைகாத்துப் பாதுகாக்கின்றனர்.

நடப்பாண்டில், தமிழக கடலோர மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகங்களை வனத் துறையினர் அமைத்து, 2,363 குழிகளிலிருந்து 2,58,775 ஆமை முட்டைகளைச் சேகரித்தனர். இவற்றிலிருந்து பொரிந்த 2,15,778 ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன.

இது தமிழக கடற்கரையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலேயே அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு 1,82,917 குஞ்சுகள் மட்டுமே கடலுக்குள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில், கடல் ஆமை முட்டையிடும் பகுதிகளுக்கு அருகில் மீனவர்கள் மீன்பிடிக்காமல் இருக்கவும், மீன்பிடிக்கும்போது கடல் ஆமை பிடிபடும்பட்சத்தில், அவற்றுக்கு எவ்விதப் பாதிப்புமின்றி கடலில் மீண்டும் விட ஏதுவாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், கடலோரப் பகுதிகளில் உயர்மட்ட விளக்குகளை இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை அணைத்து வைத்து, கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x