Last Updated : 13 Jun, 2024 05:06 PM

 

Published : 13 Jun 2024 05:06 PM
Last Updated : 13 Jun 2024 05:06 PM

நத்தப்பேட்டை ஏரியில் கலக்கும் கழிவுநீரால் தரிசாக மாறிய 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள்!

கழிவுநீர் கலந்த நத்தப்பேட்டை ஏரி நீர்

காஞ்சிபுரம்: நத்தப்பேட்டை ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அந்த ஏரி நீர் மாசடைந்து வருவது மட்டும் இல்லாமல் அந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் பல்வேறு ஏரிகளில் கலந்து அந்த ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 1,000 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளதாகவும், பயிர் செய்யப்படும் விவசாய நிலங்களிலும் போதிய அளவு சாகுபடி இல்லாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமம்.இந்த கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். மீன்பிடித்தலும் இந்த ஏரியில் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. மீன்வளத்துறையின் மூலம் பிடிக்கப் படும் மீன்களை இங்கு வரும் சிறு வியாபாரிகள் வாங்கி காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மஞ்சள் நீர் கால்வாயில் விடப்படுகின்றன.

இந்த மஞ்சள் நீர் கால்வாயில் வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் இந்த ஏரியில் விடப்படுகின்றன. இதனால் இந்த ஏரி நீர் முழுவதும் மசாடைந்து காணப்படுகிறது. இந்த ஏரியின் தொடர்ச்சியாக வையாவூர் ஏரி, களியனூர் ஏரி, உழையூர் ஏரி, பூசிவாக்கம் ஏரி, ஊத்துக்காடு ஏரி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த நத்தப்பேட்டை ஏரி நிரம்பினால் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலந்துள்ளதால் இந்த கழிவுநீர் மற்ற ஏரிகளுக்குச் சென்று மற்ற ஏரிகளின் நீரும் மசாடைகின்றன.

இதனால் இந்த ஏரியைச் சுற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் சாகுபடி முக்கியமாக நடைபெறுகிறது. ஆனால் கழிவுநீர்கலந்த நீரை பாய்ச்சும்போது சாகுபடி குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மஞ்சள் நீர் கால்வாயில் வீட்டுக் கழிவுகள் மட்டுமின்றி சாயப்பட்டறை கழிவுகளும் அதிக அளவில் விடப்படுகின்றன. இவை அப்படியே கலப்பதால் ஏரி நீர் விவசாய சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நத்தப்பேட்டை ஏரி அருகே கழிவுநீரால் தரிசாக மாறிய விளைநிலங்கள்.

இது குறித்து சமூக ஆர்வலரான கலியனூரைச் சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: நத்தப்பேட்டை ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விடுவதற்கான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஆனால் அவை செயல்படவில்லை. இதனால் ஏரி நீர் அப்படியேகலந்து மாசடைகிறது. இவ்வாறு மாசடையும் ஏரி நீர்அருகே உள்ள ஏரிகளில் கலந்து அந்த ஏரி நீரும் மாசடைகிறது. இதனால் பலர் விவசாயத்தை கைவிட்டதால் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

கழிவுநீர் கலக்கும் ஏரி நீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், பல்வேறு நோய்களும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. இந்த நீரைஅருந்தும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. மஞ்சள் நீர் கால்வையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த நீரை சுத்திகரிப்பு செய்து நத்தப்பேட்டை ஏரியில் விடுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். சுத்தகரிப்பு நிலையத்தை சீரமைக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்கள் ஏரியை சீரமைக்க நிதி கேட்டுள்ளோம். ஏற்கெனவே இருக்கும் சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாததால் இவ்வாறு ஏரிநீர் மாசடைந்துள்ளது. அதனை மாநகராட்சி சுத்திகரித்து விடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அவர்களும் ரூ.120 கோடியில் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவ தற்கான திட்டத்தை தயாரித்துள்ளனர். இந்தத் திட்டம் இறுதி வடிவம் பெற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த ஏரியின் பிரச்சினை சரி செய்யப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x