Last Updated : 07 Jun, 2024 08:45 PM

 

Published : 07 Jun 2024 08:45 PM
Last Updated : 07 Jun 2024 08:45 PM

கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பு தடுப்பு அமைப்புகளை நிறுவும் பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் கடந்தாண்டு நகாட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் ரூ.50 கோடியில், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கூவம் ஆற்றில் கழிவு நீர் கலக்கும் 23 இடங்கள் மற்றும் அங்கு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்த அறிக்கை, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனரால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக, என்என்சி போஸ் சாலை, ரிச்சி தெரு, சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம், முகப்பேர் கிழக்கு உள்பட பல்வேறு இடங்களில் கழிவுநீரகற்றும் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை கூவம் நதி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும், இதற்காக ரூ.50 கோடியை விடுவிக்கவும் சென்னை குடிநீர்வாரியம் கோரியது. இதையடுத்து, நிதி ஒதுக்குவதற்கான அனுமதியை பெற்றுத்தர, குடிநீர் வடிகால் வாரியத்திடம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கோரியது.

குடிநீர் வடிகால் வாரியமும் அரசிடம் பரிசீலிக்க வேண்டுகோள் விடுத்தது. கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் அமைப்புகளை நிறுவ ரூ.50 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x