Published : 01 May 2024 04:14 AM
Last Updated : 01 May 2024 04:14 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று வெயில் அளவு 107 டிகிரி சுட்டெரித்தது. அதிகப்படியான மரங்களை வெட்டியதால் தான் வெயில் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை தொடர் அமைந்திருப்பதால் கோடைகாலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் அளவு கடந்த காலங்களில் குறைந்தே காணப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தாலும் கோடைவெயில் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இந்த ஆண்டோ வழக்கத்துக்கு மாறாக எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வெயிலுக்கு பெயர் போன வேலூர் மாவட்டத்தை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூரில் வெயில் அளவு நேற்று 106 ஆக இருந்தது. அதுவே திருப்பத்தூர் மாவட்ட வெயில் அளவு 107 டிகிரியை கடந்து சுட்டெரித்தது. காலை 8 மணிக்கே கொளுத்த தொடங்கும் வெயில் படிப்படியாக உயர்ந்து பகல் 11 மணிக்கு சுட்டெரிக்கிறது. இந்நிலையில், மே 1-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் அளவு தொடர்ந்து அதி கரித்து வருவதால் கோடை மழை பெய்யாதா? என மக்கள் ஏங்க தொடங்கியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டியுள்ள பிற மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் கோடைமழை பெய்யுமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்ட மாக உருவாக்கப்பட்ட பிறகு பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கான கட்டி டங்கள் கட்டப்பட்ட இடங்களில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டன.
புதிய கட்டிடங்களுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன என்றால் யாராவது நம்ப முடிகிறதா ? இது மட்டுமின்றி ஏலகிரி மலை, ஜவ்வாது மலை தொடர்களில் அவ்வப்போது பரவும் காட்டுத்தீயினால் அங்குள்ள மரம், செடி, கொடி போன்றவையும் தீயில் கருகி மலையே வெறிசோடி உள்ளது. இதனால் தான் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களது வீட்டைச் சுற்றியோ, நிலத்தைச் சுற்றியோ இயற்கை வளத்தை காக்க மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்க வேண்டும். நீர்நிலை பகுதியிலும் பயன் தரும் நாட்டு மரங்களை வளர்க்க மக்கள் முன் வந்தால் மட்டுமே அடுத்து வரும் ஆண்டுகளில் கோடை வெயிலில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.
அதேநேரத்தில் மாவட்ட நிர்வாகமும் மரக்கன்றுகளை நடவு செய்வதில் அக்கறை கொள்ள வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாக்க மக்கள் தயாராக இருக்கும்போது அதை மாவட்ட நிர்வாகம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT