Last Updated : 20 Mar, 2024 04:06 AM

 

Published : 20 Mar 2024 04:06 AM
Last Updated : 20 Mar 2024 04:06 AM

வனப் பணிக்கான மத்திய அகாடமியில் வேரோடு பிடுங்கி நடவு செய்த ஆல மரங்களுக்கு மறுவாழ்வு

கோவை மாநில வனப்பணி அதிகாரிகளுக்கான மத்திய அகாடமியில் வேரோடு பிடுங்கி நடவு செய்யப்பட்டு துளிர்விட்டு வளர தொடங்கிய ஆலமரங்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் மாநில வனப்பணி அதிகாரிகளுக்கான மத்திய அகாடமியில், வேரோடு பிடுங்கி நடவு செய்யப்பட்ட 4 ஆலமரங்கள் 3 மாதங்களில் துளிர் விட்டு வளர தொடங்கியுள்ளன.

கோவை கெளலி பிரவுன் சாலையில் மாநில வனப்பணி அதிகாரிகளுக்கான மத்திய அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மாவட்ட வன அலுவலகம், மாநில வன உயர் பயிற்சிகம், மத்திய மரப்பெருக்கு நிறுவனம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு விடுதி கட்டு வதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 6 வயதுடைய 4 ஆலமரங்கள் இருந்தன. மத்திய அகாடமி முதல்வர் திருநாவுக்கரசு ஆலோசனையின் பேரில், இந்த மரங்களை வெட்டாமல், வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டன. தற்போது 4 ஆலமரங்களும் துளிர்விட்டு வளர்ந்துள்ளன.

இது குறித்து, வனப் பணிக்கான மத்திய அகாடமி அதிகாரிகள் கூறும்போது, “மாற்று இடத்தில் 1.50 மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டி, வேரோடு பிடுங்கப்பட்ட 7 மீட்டர் உயரமுள்ள 4 ஆலமரங்கள் நடவு செய்யப்பட்டன. ஆணிவேர், சல்லி வேர் என எதுவும் பாதிக்கப்படாத வகையில் நடவு செய்யப்பட்டன. மேலும், காற்றில் மரங்கள் அசையாதவாறு கயிறுகள் கட்டப்பட்டன. ஆலமரம் செழித்து வளரும் வகையில் செம்மண், எரு ஆகியவை உரமாக வழங்கப்பட்டன.

தற்போது மூன்று மாதங்களான நிலையில் நான்கு ஆலமரங்களும் துளிர் விட்டு நன்றாக வளரத் தொடங்கியுள்ளன. மாற்று முறையில் நடவு செய்யப்படும் மரங்களுக்கு போதிய கண்காணிப்பு, தேவையான தண்ணீரை ஊற்றுவதன் மூலம் மரம் நன்றாக வளருவதை உறுதி செய்ய முடியும். பொதுவாக அதிக வயதுடைய மரங்களை மாற்று முறையில் நடவு செய்யும் போது வளருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. நடுத்தர வயதுடைய மரங்களை மாற்று முறையில் நடவு செய்யும்போது துளிர் விட்டு வளருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x