Published : 07 Mar 2024 06:12 AM
Last Updated : 07 Mar 2024 06:12 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத் தீயை 4 மணி நேரம் போராடி வனத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது. காய்ந்த சருகுகளில் அடிக்கடி தீப்பற்றி காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன. நீர்நிலைகளும் வறண்டு வருவதால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அவ்வப்போது காட்டு மாடுகள், மான்கள் நகர்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்களும், தாவரங்களும் தீயில் கருகின.
வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனத்துறையினர், கூலியாட்களை வைத்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைத்த பிறகும் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் பல கி.மீ. தூரத்துக்கு தென்பட்டது.
இதேபோல், நேற்று பகலில் சவரிக்காட்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மெல்ல சாலையோரங்களில் இருந்த புற்கள், செடிகளில் பரவியது. அவ்வழியாக சென்றவர்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT