Published : 19 Feb 2024 05:40 AM
Last Updated : 19 Feb 2024 05:40 AM

கொடைக்கானல் மலைப் பகுதியில் நள்ளிரவில் 100 ஏக்கரில் பரவிய காட்டுத் தீ

கோப்புப் படம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் நள்ளிரவில் பரவிய காட்டுத் தீயால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் செடி, கொடி, மரங்கள் தீயில் கருகின.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சில வாரங்களாக இரவில் குளிரும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் வனப் பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புற்க‌ள் காய்ந்து வருகின்றன. இதன்காரணமாக வனப் பகுதிகளில் எளிதில் தீ பற்றும் அபாயம் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்துபழநி செல்லும் மலைச் சாலையில் மேல்பள்ளம் என்ற இடத்தில் வனப் பகுதியில் காய்ந்த நிலையில் காணப்படும் புற்களில் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது.

வனத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கோவில்பட்டி மலைக் கிராமம் அருகேயுள்ள அரசு வருவாய் நிலப்ப‌குதி மற்றும் தனியார் நிலங்களில் காய்ந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் தீ பரவியது.

அப்பகுதி மக்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தும், பலன் அளிக்கவில்லை.

இரவு நேரம் என்பதால் வனம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீப்பற்றிய பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் குளிர் நிலவியதாலும், காற்றின் வேகம் குறைந்ததாலும் தீ மேலும் பரவாமல், தானே அணைந்தது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் காட்டுத்தீ பரவி, அரியவகை மூலிகை மரங்கள் அழிவதும், வனவிலங்குகள் பாதிப்புக்கு உள்ளாவதும் தொடர்கிறது.

வனப் பகுதியில் தீயை அணைக்க நவீன கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, காட்டுத் தீயில் இருந்து வனப் பகுதியைக் காப்பற்ற வேண்டும் என்றுஇயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x