Published : 08 Feb 2024 08:25 PM
Last Updated : 08 Feb 2024 08:25 PM

தமிழகத்தில் 389 பறவை இனங்கள், மொத்த பறவைகள் 6,80,028 - அரசு புள்ளிவிவரம்

கோப்புப்படம்

சென்னை: வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் ஆகும்.மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028 இல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 69913 நீர்வாத்துகள், 28,822 பூநாரைகள், 6,789 முக்குளிப்பான்கள், 19,919 கடற்கரை பறவைகள், 173294 கடற்புறா, ஆலா வகைகள், 17865 பெருங்கொக்குகள், 54008 பாம்பு தாரா மற்றும் நீர்க் காகங்கள், 165635 கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள் என மொத்தம் 536245 நீர் பறவைகள் நேரடியாக கணக்கிடப்பட்டுள்ளன.

6450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத் துறையைச் சேர்ந்த 3350 பணியாளர்கள் என மொத்தம் 9800 நபர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் மதிப்பீடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்.ரா.ரெட்டியின் மேற்பார்வையிலும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ் குமார் டோக்ரா, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) வீ.நாகநாதன், மற்றும் உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) அ.ஷர்மிலி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x