Published : 15 Jan 2024 09:02 AM
Last Updated : 15 Jan 2024 09:02 AM
வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி மலைப் பாதையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி கவனமாக வாகனங்களை இயக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பருவகாலமாக விளங்கக்கூடிய குளிர் பனிக் காலம், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை சாரல் மழையுடன் வெயிலும், இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது. இதனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வர தொடங்கியுள்ளனர்.
இந்த காலநிலை வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரும். கடந்த சில நாட்களாக வால்பாறை - பொள்ளாச்சி மலைப் பாதையில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக வால்பாறை முதல் அட்டகட்டி வரை பனிமூட்டமும், குளிரும் நிலவுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. மேலும், வெளியூர்களில் இருந்து வந்த ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க முடியாமல், பனி மூட்டம் குறைந்த பிறகு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பனி மூட்டத்துடன் புகைப் படம் எடுத்துக் கொண்டனர். வால்பாறை - பொள்ளாச்சி மலைப் பாதையில் அட்டகட்டி முதல் வால்பாறை வரை பனி மூட்டம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும். மிதமான வேகத்தில் சாலையிலுள்ள அறிவிப்பு பலகை மற்றும் வெள்ளை கோடுகளை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டுமென, வால்பாறை போலீஸார் அறிவுறுத்தி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT