Published : 09 Jan 2024 06:29 PM
Last Updated : 09 Jan 2024 06:29 PM
‘ஒண்ணு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது’ என்ற சொல் வழக்குக்கு ஏற்ப, தென் மாவட்டங்களில் அதி கனமழையால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை குறைவால் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 வட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில், சுமார் 27 ஆயிரம் ஏக்கர் மட்டும் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீரில் பாசனம் பெறுபவை. மற்றதில் பெரும்பான்மையான பரப்பளவு மழை நீரை நம்பி சாகுபடி செய்யக்கூடியவை ஆகும். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையானது இயல்பை விட சுமார் 76 மி.மீட்டர் குறைவாக பதிவாகியுள்ளதால் வயல்களில் நீரின்றி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
பெரும் பொருட்செலவில் சாகுபடி செய்த பயிர்கள் கண் முன்னே கருகுவது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் ஓரிரு நாட்களுக்குள் கனமழை பெய்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும். இல்லையேல், பயிர்கள் முழுவதும் கருகுவதை தடுக்க முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் விவசாயி குமார் கூறியது; புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யக்கூடிய மொத்த பரப்பளவில் கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதியில் மட்டும் காவிரி நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் மழை நீரை கண்மாய்களில் தேக்கி வைத்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையானது நிகழாண்டு குறைவாக பதிவாகியுள்ளது. இதனால் கண்மாய்களிலும் நீர் இல்லாததால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. ஏறத்தாழ 15 சதவீதத்துக்கும் மேல் பயிர்கள் கருகிவிட்டன. பல்வேறு பகுதிகளில் கருகிய பயிர்களை மாடுகள் மேய்ந்து வருகின்றன.
ஓரிரு நாட்களுக்குள் 10 செ.மீட்டருக்கும் மேல் மாவட்டம் முழுவதும் சராசரி மழை பெய்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்றக்கூடிய சூழல் ஏற்படும். இல்லையேல், பாதிப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். கல்லணைக் கால்வாயில் விரைவாக நீர் திறந்தால் கூட காவிரி படுகை பகுதியில் சாகுபடியை பாதுகாக்கலாம்.
அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் குடியிருப்புகள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கூட கன மழை பெய்துவருகிறது. ஆனால், இப்பகுதியில் மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகின்றன.
கடந்தாண்டு ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் மாவட்டத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கி அழிந்தது. மற்றொரு பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது. அப்போதும் விவசாயிகள் அரசிடம் இருந்து நிவாரணத்தை எதிர்பார்த்தனர். அதே நிலை நிகழாண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலர்கள் கூறியது, ‘‘மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை (ஜூன் முதல் செப்டம்
பர் வரை) இயல்பாக பெறவேண்டிய அளவை (303 மி.மீ.) விட 8 மி.மீ. குறைவாக பதிவானது. இதேபோல, வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இயல்பாக பெறவேண்டிய அளவைவிட (371 மி.மீ.) 76 மில்லி மீட்டர் குறைவாக பதிவானது.
தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, மழையை எதிர்பார்க்கலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT