Published : 12 Oct 2023 04:12 AM
Last Updated : 12 Oct 2023 04:12 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் காய்கறி, உணவுக் கழிவு மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
காளையார்கோவில் அருகே மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் சத்துணவு சமைக்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 2 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும். இதை பயன் படுத்தி பள்ளிகளில் சத்துணவு சமைத்துவிட முடியும்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில் ‘‘சத்துணவு சமைக்கும் போது கிடைக்கும் காய்கறி கழிவுகள், மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கிடைக்கும் உணவுக் கழிவுகள், இது தவிர சந்தைகளில், குப்பைகள் சேகரிக்கும் போது கிடைக்கும் காய்கறி, உணவு கழிவுகள் போன்றவை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்’’ என்று கூறினார்.
இது குறித்து ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் கூறுகையில், ‘‘ சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி, உணவுக் கழிவுகள் மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியக்குடி கல்யாணா கிருஷ்ணா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டன. விரைவில் அவை திறக்கப்பட உள்ளன’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT