Published : 21 Aug 2023 03:01 PM
Last Updated : 21 Aug 2023 03:01 PM

பசுமை புத்தாய்வு திட்டம் தொடக்கம்: பசுமைத் தோழர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் வாழ்த்து 

பசுமை புத்தாய்வு திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பசுமை தோழர்கள் 40 பேர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை: காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் பசுமை புத்தாய்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை செயல்படுத்திட தேர்வு செய்யப்பட்டுள்ள 40 பசுமைத் தோழர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 21) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், இத்திட்டத்தை செயல்படுத்திட அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்கள் முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் 2021- 2022-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, முதல்வரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தினை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதல்வரின் பசுமைத் புத்தாய்வுத் திட்டமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்க்கை முறை போன்ற துறைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்களுக்கான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தமிழக அரசின் அர்ப்பணிப்பை மட்டுமல்லாது மாநிலத்தின் சுற்றுச்சூழல் குறித்த எதிர்காலத்தை உறுதி செய்வது, கொள்கை வடிவமைப்பு மற்றும் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இளைஞர்களின் பங்கினையும் பறைசாற்றுகிறது.

முதல்வரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்படும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம் இத்திட்டத்துக்கான அறிவுசார் பங்குதாரராக செயல்படும். ஒரு திட்டத் தலைவர், 40 பசுமைத் தோழர்கள் மற்றும் நான்கு ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம் மூலமாக இத்திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய மூன்று துறைகளின் துணைகொண்டு தமிழகத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தலைமைதாங்கும் விதமாக சுற்றுச்சூழல் ரீதியாக முன்னேறிய மாநிலமாக மாற்றுவது, சுற்றுச்சூழல்சார் கொள்கைகள் வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தில் உறுதிமிக்க இளைஞர்களை ஈடுபடுத்துதல், தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் சேவைகளை சிறப்பாக வழங்குவதில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உறுதுணையாக இருத்தல், சுற்றுச்சூழல் கொள்கை மேலாண்மைக்கு வலுவான நிறுவன அமைப்புகளையும் செயல் முறைகளையும் உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீவிர ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளின் மூலம் நிறுவன அறிவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல் போன்றவையாகும்.

பசுமைத் தோழர்கள் தமிழகத்திலுள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கிய பங்காற்றுவர். பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு கால நிலைமாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் போன்ற முக்கிய அரசுத் திட்டங்களின் செயலாக்கத்துக்கு பசுமைத் தோழர்கள் துணை புரிவர். சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” போன்ற சூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற சேவைகளை ஆற்றுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சேவையாற்றுவர். இக்காலகட்டத்தில், அவர்களுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.60,000 வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படும். அவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.

பசுமைத் தோழர்கள் இரண்டாண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக் கழகத்திடமிருந்து “கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்புக்கான பட்டத்தையும் பெறுவர்.முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டத்தின் தொடக்கமானது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறிக்கோள்களுடன் இளைஞர்கள் இயைந்து செயல்படுவதற்கான முதல் படியாக இருக்கும். நம் மாநிலத்தை பசுமையான, மீள்திறன்கொண்ட மாநிலமாக உருவாக்குவதில் இளைஞர்களின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x