Published : 19 Jul 2023 02:04 PM
Last Updated : 19 Jul 2023 02:04 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரம் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வறட்சியின் கோரதாண்டவத்தால் இப்பகுதியிலுள்ள ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படும் பனை மரங்களும் கருகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன்முதல்வாரத் தில் பாபநாசம் அணையிலிருந்து கார்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிடும். இவ்வாண்டு பருவமழை பொய்த்துள்ளதால் அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லை. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதை மாவட்ட நிர்வாகம் தள்ளிப்போட்டுள்ளது.
தற்போதுள்ள கால நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு மட்டும்,அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பாசன கால்வாய்களில் தண்ணீர் வரத்து இல்லை. தண்ணீர் இல்லாமல் குளங்களும் வறண்டுள்ளன. மாவட்டம் முழுக்க வறட்சி தலை விரித்தாடுகிறது. எனவே, திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இச்சூழ்நிலையில் மாவட்டத்தில் வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் ராதாபுரம் வட்டாரத்தில் கற்பகத்தரு எனப்படும் பனைமரங்கள் கூட வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கருகுவது வேதனையானது. ராதாபுரம் வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் பனை மரங்களில் இருந்து நுங்கு, பதநீர் இறக்கி விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
இதுபோல் பதநீர் உள்ளிட்ட பொருட்களில் இருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியும் நடைபெறுகிறது. இந்நிலையில் பனை மரங்கள் வறட்சியால் கருகி வருவது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வறட்சியையும் தாக்கு பிடிக்கும் திறன் கொண்ட பனை மரங்கள் கருகுவதால், இதை நம்பி இருப்போருக்கு பேரிடியாக இருக்கிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “ராதாபுரம் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யவில்லை. ராதாபுரம் கால்வாயில் திறக்கப்பட்ட பாசன நீரும் வந்தடையவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கற்பக மரமான பனை மரமும் கருகுவது கவலை அளிக்கிறது. வறட்சியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT