Published : 27 Jun 2023 07:49 PM
Last Updated : 27 Jun 2023 07:49 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கனிமவளங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால் மேற்கு தொடர்ச்சி மலை உருக்குலைந்து வருகிறது. இதனால் இன்னும் 10 ஆண்டுகளில் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. குமரி மாவட்டம் இயற்கை வளங்கள், நீர்நிலைகள் நிறைந்து விவசாயம் செழிப்புடன் நடைபெற இந்த மலையே காரணம்.
ஆற்றிலிருந்து மணல் அள்ளவும், மலையிலிருந்து கற்களை வெட்டி எடுக்கவும் கேரளாவில் முற்றிலும் தடை விதித்து இயற்கையை அம்மாநில அரசும், மக்களும் பாதுகாக்கும் நிலையில் அம்மாநிலத்தின் தேவைக்காக குமரி மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவு குண்டு கல், ஜல்லி, எம் சாண்ட் போன்றவை கொண்டு செல்லப்படுகிறது.24 மணி நேரமும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் கேரளாவுக்கு கனிம வளங்களை விதிகளை மீறி கொண்டு செல்கின்றன.
பாலைவனமாகும் நிலங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலையை குடைந்து கிணறு போல் பல அடி ஆழத்துக்கு தோண்டி கனிமவளங்கள் தகர்த்து எடுக்கப்படுவதால் குலசேகரம், சித்திரங்கோடு, களியல், பேச்சிப்பாறை, சுங்கான்கடை, வில்லுக்குறி, களியங்காடு, ஆரல்வாய்மொழி உட்பட குமரி மாவட்டம் முழுவதும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்கள் பாலைவனம் போல் காணப்படுகிறது. யுனெஸ்கோவால் சிறந்த இயற்கைவள பாதுகாப்பு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அழியும் தருவாயில் உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் மலையின் பெரும் பகுதி காணாமல் போய்விடும்.
இயற்கையை சீரழித்ததால் தென் மேற்கு பருவ மழைக் காலமான தற்போது மழையின்றி வறட்சி நிலவுவதால் விவசாயத்துக்கு தண்ணீரின்றி மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. மலைகளை தகர்ப்பது தொடரும் பட்சத்தில் இதை விட கொடுமையாக அடுத்த தலைமுறையினர் பெரும் இயற்கை பேரழிவுகளை சந்திக்க காரணமாக அமையும்.
இதை உணர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திருட்டுத்தனமாக நள்ளிரவு நேரங்களில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை உயிரை துச்சமாக மதித்து, மறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கைவிரிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையை காவு வாங்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்பதால் தடை செய்ய இயலாது எனக் கூறி கைவிரிப்பது கொடுமையிலும் கொடுமை.
கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதுடன் கிராம, மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பழுதடைகின்றன. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் அரசு அனுமதியுடன் செயல்படும் 15 கல்குவாரிகளை தவிர பிற குவாரிகளில் ஆய்வு செய்து சீல் வைக்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்துறையினர், போலீஸார், கனிமவளத்துறை அடங்கிய குழுவினர் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர்.
ஆனால், இதெல்லாம் மக்களை திசை திருப்புவதற்காக நடத்தப்படும் ஏமாற்றும் வேலை. கல்குவாரிகளில் இருந்து உள்ளூர் தேவைகளுக்கு மட்டும் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதிக்க வேண்டும். கேரளாவுக்கு கடத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இதனால் மட்டுமே மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: “குமரி மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்து செழிப்பாக இருப்பதற்கும், பருவ மழை பெய்வதற்கும் மேற்கு தொடர்ச்சி மலையே காரணம். இதைவிட அதிகம் இயற்கை வளம் கொண்ட பகுதிகள் கேரள மாநிலத்தில் உள்ளன. அங்கிருந்து சிறிய அளவு கல்லைக்கூட பெயர்த்து எடுத்து கட்டுமானத்துக்கு பயன்படுத்தமுடியாத வகையில் அந்த மாநில அரசு கடுமையான சட்ட விதிகளை வகுத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு அலை தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு அமைக்க இங்கிருந்து தகர்த்து எடுக்கப்படும் பெரிய கற்களை பயன்படுத்த முடியவில்லை. ஆனால், அரசியல் செல்வாக்குள்ள நபர்களால் கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் உட்பட பல துறைமுகங்களுக்கும் இங்கிருந்து தான் கற்கள் அளவுக்கதிமாக கொண்டு செல்லப்படுகிறது.
அதே நேரம் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், கோழி மற்றும் மீன், இறைச்சி கழிவுகளை லாரிகளில் ஏற்ற வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கொட்டுகின்றனர்.
இதே நிலை நீடித்தால் இயற்கை வளங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வெகு விரைவில் குமரி வறட்சியான மாவட்டமாக மாறி விடும். இயற்கை வளம் சிறந்தோங்க பாதுகாப்பு அரணாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை காப்பாற்ற அரசு வலுவான சட்டங்களை கொண்டு வந்து தடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT