Published : 15 Mar 2023 06:38 AM
Last Updated : 15 Mar 2023 06:38 AM
இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வின் முதல் நாளில், 50,000க்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை. தமிழகத்திலா இப்படி..? அதிர்ச்சியாக இருக்கிறது.
கல்வியறிவில் முன்னேறிய மாநிலத்தில் பள்ளி மாணவர்களிடையே பொதுத் தேர்வு எழுதுவதில் ஏன் இந்த சுணக்கம்..? எங்கோ ஏதோ தவறு இருக்கிறது. அது என்ன..? அரசு, குறிப்பாகப் பள்ளிக் கல்வித் துறை, உடனடியாக ஆராய வேண்டும்; அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
2020-ம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து அடுத்து 2 ஆண்டுகளுக்கு, கரோனா பெருந்தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய்க் கிடந்தது. பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. அதிலும் பள்ளிக் கல்வி, பெரும் சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது.
பள்ளிகள் திறக்கப்படவில்லை; நேரடி வகுப்புகள் இல்லை; ஆன்லைன் வகுப்புகளும் எதிர்பார்த்த பலன் தரவில்லை; பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வு வைக்கலாம் என்று அரசு தீர்மானித்தாலும் எல்லாத் திசைகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போதே இது குறித்து நாம் எச்சரித்தோம். எது நடக்கக் கூடாது என்று அஞ்சினோமோ அது இப்போது நம் கண் முன்னே அரங்கேறுகிறது.
பொதுத் தேர்வு என்றாலே ஒதுங்கிச்செல்கிற மனநிலைக்கு கணிசமானோர் வந்து விட்டனர். சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை. இவர்கள் எங்கு போவார்கள்..? இவர்களை மீண்டும் முறையான ‘கல்வி வளையத்துக்குள்’ கொண்டு வருவது எப்படி..? தேர்வு எழுதாத மாணவர்களின் வசதிக்காக மறுதேர்வு நடத்த இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தமிழக அரசுக்கு பாராட்டுகள். இது போதாது. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.
முதலில், தேர்வு எழுதாத மாணவர்கள் பற்றிய முழுத் தகவல்கள் திரட்டப்பட வேண்டும். அவர்களின் சமூகப் பின்னணி, குடும்பச் சூழல், பெற்றோருக்கு நேர்ந்த பொருளாதார நெருக்கடிகள், கரோனா தொற்றின் பாதிப்பு உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒருசேரப் பார்க்க வேண்டும். பள்ளிக்கு செல்லாததால் மாணவர் மனதில் எழுந்த குழப்பங்கள், சக மாணவர்களுடன் பழக இயலாமல் போனதால் ஏற்பட்ட தனிமை, சிறிது சிறிதாக வளர்ந்து வளர்ந்து சிறுவரை அடிமைப்படுத்தி விட்ட வெற்றுக் கேளிக்கைகளின் ஆதிக்கம், இதனால் அறிவுத் தளத்தில் செயல்பட இயலாமல் செய்த மனச்சோர்வு… எல்லாமாக சேர்ந்து இளம் வயதினரை, தேர்வுக்கு எதிராகத் திருப்பி விட்டது.
இத்துடன், கல்வி, பாடம், தேர்வு குறித்து அரசியல் வணிகர்கள் விதைத்தஎதிர்மறை எண்ணம், நிலைமையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. கடந்தசில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர், கல்லூரி இளைஞர்களைக் கல்வியில் இருந்து திசை திருப்பி விடுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்வு என்றாலே சுமை; அது தேவையில்லை; தேர்வும்மதிப்பெண்ணும் ஒருவனின் அறிவுத்திறனுக்கான அளவுகோலாக இருக்க இயலாது என்றெல்லாம் கூறி மாணவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை மழுங்கடித்து விட்டோம். மேலோட்டமாகப் பார்த்தால் உளவியல் சார்ந்த பிரச்சினையாகத் தோன்றலாம். உண்மையில் இது இன்னும் ஆழமானது; மிகத் தீவிரம் ஆனது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உலகம் முழுதும் ஒருவிதபாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி விட்டது. வேறு எதையும் விட, ‘சம்பாதிக்கும் நோக்கம்’ முதன்மையாகிப் போனது; கற்றலுக்கான தேடலும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. கல்விதான்நம்மை முன்னேற்றும்; அதுவே நம் எல்லாருக்கும் உறுதியான நம்பத் தகுந்த சாதனம் என்பதை உலகம் மெல்ல நிராகரிக்கத்தொடங்கி விட்டது. படிப்பு – பணம் இடையிலான மோதல் பல காலமாக இருந்துவருவதுதான். கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் மனித குலத்தை பணத்தின் பக்கம் முழுமையாகத் திருப்பி விட்டது. படிப்பு இரண்டாம் பட்சமாகி விட்டது. தமிழ்நாட்டிலும் இது பிரதிபலித்து உள்ளது.
இந்த நச்சுச் சூழலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் மாணவர்களின் பெற்றோருக்குக் குறைந்த பட்ச பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். காலை சிற்றுண்டி, மதிய உணவு,கட்டாய இலவசக் கல்வி உள்ளிட்டதிட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவைதாம். அதை விடவும் இவ்வகைத் திட்டங்களுக்கான தேவை, சிறிது சிறிதாக நீக்கப்பட வேண்டும். அதாவது பெற்றோரின் பொருளாதார நிலைமை மேம்பட வேண்டும். இதற்கு, சிறுவரின் கல்வி ஆர்வம்,பெற்றோரின் பொருளாதார நிலையுடன் நெருங்கிய தொடர்பு உடையது என்பதை அரசு உணர வேண்டும். இதுவரை அப்படி ஒரு எண்ணம் அரசுக்கு இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
கல்வி முறையும் சீராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்களின் பணிச்சூழல் வெகுவாக மாறி இருக்கிறது. குறிப்பாக, அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எப்போதும் கடுமையான அழுத்தத்திலேயே பணி ஆற்றுகிறார்கள். பள்ளி நிர்வாகம், பொதுமக்களுடன் சுமுக உறவு, அவ்வப்போது பிறப்பிக்கப்படும் அரசு உத்தரவுகள், தொடர்ந்து ‘துரத்திக் கொண்டே’ இருக்கும் உயர் அலுவலர்கள், சமீபகாலமாய்ப் பெருகி வரும் அரசியல் குறுக்கீடுகள்….
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ‘பெரிய’பள்ளிகளில் மட்டுமேனும் 2 தலைமைஆசிரியர்களை நியமித்தல் தொடர்பாகஅரசு பரிசீலிக்கலாம். பொதுமக்கள்மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன்ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட ஒருவர்; பள்ளி நிர்வாகம் மற்றும் வகுப்புகளை கண்காணிக்கும் பணிக்கு மற்றொருவர் என்று இருந்தால் மிக நல்ல பயன்அளிக்கும்.மற்ற ஆசிரியர்கள், பொது மக்கள், பெற்றோர், மாணவர் தொடர்பாக அரசு செய்ய வேண்டியது என்ன..?
(பார்ப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT