Published : 05 Sep 2017 10:58 AM
Last Updated : 05 Sep 2017 10:58 AM
பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்ற மாணவி. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளம் பெண். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து துணிச்சலுடன் எழுந்துவந்த விடிவெள்ளி இன்று இல்லை!
‘நான் மருத்துவராக வேண்டும். என்னுடைய பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டால் எனக்கு மருத்துவப் படிப்பு உறுதி’ என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அனிதா தன்னை மாய்த்துக்கொண்டார்.
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனமுடைந்தவர் அல்ல அவர். நீண்ட நெடிய சமூக வரலாற்றில் வென்றெடுத்த நீதி மறுக்கப்பட்டதால் வாழ்வின் விளிம்புக்குச் சென்றவர். சமூக ஒடுக்குமுறை, வறுமை, பெண்ணுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இப்படிப் பல தடைகளைக் கடந்துவந்து பிளஸ் டூ பொதுத்தேர்விலும் உயர்ந்த மதிப்பெண் குவித்து வாழ்வின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக இருந்தவரின் அத்தனை முயற்சிகளையும் நீட் தேர்வின் முடிவு மதிப்பிழக்கச் செய்துவிட்டது. இதே போன்று நீட் முடிவினால் பாதிக்கப்பட்டு எத்தனையோ தமிழக மாணவர்கள் இன்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னால் தற்போது எழுந்து நிற்கும் கேள்வி, ‘அடுத்தது என்ன?’
ஒவ்வொரு குழந்தையும் வெற்றியாளரே!
“தேர்வு முடிவு, காதல் தோல்வி தொடர்பான காரணங்களுக்காகச் சில ஆயிரம் உயிர்களை நாம் ஆண்டுதோறும் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். பொதுத் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்களைக் குவிக்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமும் கடின உழைப்பும் கொண்ட, நீட் தேர்வையே சட்ட ரீதியாகக் கேள்வி கேட்கும் துணிச்சல் மிகுந்த ஒரு இளம் பெண் தன்னை ஒரு தோல்வியாளராக நினைக்கவைத்தது எது? கல்வி அமைப்பு, பெற்றோர், பள்ளிக்கூடம், அரசாங்கம் என எல்லோரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
இங்கு திறமைசாலி, திறமை அற்றவர் என்பதை ஒரு மதிப்பெண்கூடத் தீர்மானித்துவிடுகிறது. 98 சதவீதம் பெற்றிருந்தாலும் அடுத்தவர் 99 சதவீதம் பெற்றுவிட்டால் ‘கட் ஆஃப்’ என்கிற திட்டத்தின் கீழ் முந்தைய மதிப்பெண் எடுத்தவர் தோல்வியாளர் ஆக்கப்படுகிறார். இந்த அடிப்படையில்தான் யார் எதைப் படிக்க வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் விருப்பம், திறமை என்பதெல்லாம் அடிபட்டுப்போகிறது. இந்த நிலை கட்டாயம் மாற்றப்பட வேண்டும். குழந்தைகளுக்குத் தோல்வியை எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் வெற்றியாளரே என அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்” என்கிறார் சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் தலைவர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்.
அரசு என்ன செய்தது?
“தற்கொலைக்கு முன்பு அனிதா, ‘அடுத்து என்ன செய்வதென்று தெரியாவில்லை’ என்ற கையறு நிலையில் இருந்ததாகத் தெரியவருகிறது. அவர் தனக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இது எத்தகைய அவல நிலை?” என்கிற கேள்வியை எழுப்புகிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா.
இங்கு மிகப் பெரிய சிக்கல் அவர் எதிர்பார்த்த மருத்துவப் படிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை என்பதுகூட அல்ல. கடைசி நிமிடம்வரை நீட் நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது அதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்கிற பதைபதைப்பிலேயே பல நாட்கள் மன அழுத்தத்தில் இருந்ததுதான் என்கிறார் வந்தனா. அனிதா மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் குறிப்பாக மருத்துவக் கனவோடு படித்துவந்த மாணவர்களுக்கும் இந்தப் பதற்றம் மனதில் நிலைகொண்டிருந்தது.
“இத்தகைய பதற்றத்துக்குக் காரணம் அரசுதான். குழப்பத்திலிருக்கும் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் நீட் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தெளிவாக அரசு அளிக்கத் தவறியது. அத்தனை பள்ளிகளுக்கும் மாற்றுத் திட்டத்தை வடிவமைத்துத் தந்து அவற்றை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், நீட் சார்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகாவது அரசு சார்பில் ஏதாவது வழிகாட்டல் முன்வைக்கப்பட்டதா? இதே போல ஒவ்வொரு முறையும் ஒரு தற்கொலை நேரும்போது மட்டுமே வருந்திவிட்டுக் கலையப் போகிறோமா?” என்கிறார் வந்தனா ஆதங்கத்துடன்.
வாழ்க்கையே போராட்டம்தான்!
மனநல மருத்துவரான டாக்டர் ஜி.ராமானுஜம் கூறும்போது, “தனிப்பட்ட ஏமாற்றத்தினால் தற்கொலை செய்துகொள்வதற்கும் பொது நலனுக்காகத் தற்கொலையைப் போராட்ட வடிவமாகத் தேர்ந்தெடுப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை போராடியவர் தற்கொலை செய்துகொள்வது, வெறுமனே தனக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது என்பதனால் அல்ல.
தன்னை மாய்த்துக்கொண்டால் இந்தப் பிரச்சினை மக்கள் போராட்டமாக வெடிக்கும் என அவர் நினைத்ததனால்தான். மாற்று வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கவிடாமல் ஒரே வட்டத்துக்குள் நம் இளம் தலைமுறையினரைத் திணிப்பதைத்தான் நெடுங்காலமாக நம்முடைய கல்வி அமைப்பு செய்துவருகிறது. ஆகவே, நம்முடைய கல்வி அமைப்பும் அனிதாவின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை இழந்த மற்ற மாணவர்கள் இதற்காகக் களமிறங்கிப் போராடும் அதே வேளையில், வாழ்க்கையே போராட்டம்தான் அதற்கு ஒருபோதும் தற்கொலை என்பது தீர்வாகாது என்று உறுதிகொள்ள வேண்டும்.
உதவி கரம்
குழந்தைகளுக்குத் தோல்வி நேரும்போது அவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களுடைய நடத்தையில் தடுமாற்றம் காணப்படும்போது சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். இங்கு தொலைபேசி உரையாடல் மூலமாகவும் நேரடியாகவும் மனநல ஆலோசனை வழங்கும் அவர்களை 044- 24640050 என்ற எண்ணிலும், help@snehaindia.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT