Published : 30 Jan 2023 04:17 AM
Last Updated : 30 Jan 2023 04:17 AM
கோவை: பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி, மழலையர் பள்ளிகள் சங்கம் சார்பில் பள்ளி தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.
குழந்தைகள் நல மருத்துவர் ஜெய் ஸ்ரீ அஸ்வத் பேசும்போது, ‘‘வீட்டிலும், பள்ளியிலும் மழலையர் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்தால் கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சத்தான உணவு குழந்தைகளின் நலனுக்கு மிகவும் அவசியம்’’ என்றார். பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி தாளாளரும், குழந்தைகள் நல மருத்துவருமான உஷா இளங்கோ பேசும்போது, ‘‘இன்று பெரும்பாலான பெற்றோர் அதிக விலை கொண்ட விளையாட்டுப் பொருட்களை தங்களின் குழந்தைகளுக்கு வாங்கி தருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நமது பாரம்பரிய விளையாட்டு முறைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தருவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவது இல்லை. இத்தகைய நடவடிக்கையை மாற்றிக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் அவசியம்’’என்றார்.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியை ஜெகதாம்பாள் பேசும்போது, ‘‘மழலையர் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அதிக கவனத்துடன் கையாள வேண்டும். எந்த வகையான கல்விமுறையில் குழந்தைகளை சேர்க்கிறோம் என்பது முக்கியமல்ல. குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மன நலனை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டியதுதான் மிகவும் அவசியம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT