Published : 28 Jan 2023 06:23 AM
Last Updated : 28 Jan 2023 06:23 AM

மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக் கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.46.50 கோடி செலவில் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், எம்.பி செ.ராமலிங்கம், ஆட்சியர் ரா.லலிதா மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்.

மயிலாடுதுறை/ திருவாரூர்: மயிலாடுதுறையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, ரூ.46.50 கோடி செலவில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பூமி தொண்டு நிறுவன பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3.65 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்ட தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கொள்ளிடம் வட்டாரம் அளக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், குத்தாலம் வட்டாரம் கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்புக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து, அவர் பேசியது: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தலா 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.7.19 கோடி செலவில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி செலவில் புதிய மருந்து கிடங்கு நிறுவப்படும்.

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வர தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தி வருகிறார். இதற்கான அனுமதி பெற்றவுடன் முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுவார் என்றார்.

நிகழ்ச்சியில், எம்.பி செ.ராமலிங்கம், ஆட்சியர் ரா.லலிதா, எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜகுமார், எம்.பன்னீர்செவம், எஸ்.பி என்.எஸ்.நிஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவலர் உமாமகேஸ்வரி சங்கர், பூமி தொண்டு நிறுவன பங்களிப்பு இணை நிறுவனர் கே.கே.பிரகலாதன், நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் குருநாதன், துணை இயக்குநர் குமரகுருபரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூரில்...

முன்னதாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு ரூ.20 கோடி மதிப்பில் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் வரவேற்றார்.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருதம் மாணவ மன்றத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x