Published : 05 Nov 2022 06:06 AM
Last Updated : 05 Nov 2022 06:06 AM

வேலூர் | மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம்: தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளே வேண்டாம்

கூட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்.படங்கள் : வி.எம்‌.மணிநாதன்.

வேலூர்: தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுவினரின் மண்டல அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு: தோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சந்தியா, ‘கைத்திறன் கல்வியுடன் சிலம்பம், கிராமப்புற விளையாட்டுகள் கற்றுக்கொடுக்க வேண்டும். எங்கள் பள்ளியில் நூலகம் பெயரளவுக்கு இருக்கிறது. அங்கு 10 பேர் மட்டுமே அமர முடியும்’ என்றார். அதேப்பள்ளி மாணவி விஜயலட்சுமி, ‘எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை’ என்றார். வேலூர் அரசினர் பள்ளி மாணவி இலக்கியா, ‘பள்ளிகளில் கழிவறை வசதி குறைவாக இருக்கிறது’ என்றார். ராணிப்பேட்டை அரசினர் பள்ளி மாணவர் ஹேமந்த்குமார், ‘பிளஸ் 2 சிறப்பு வகுப்பு முடித்து வீடு திரும்ப அரசுப் பேருந்து இருப்பதில்லை’ என்றார்.

ஜங்களாபுரம் அரசினர் பள்ளி மாணவி காயத்ரி, ‘அரசு பள்ளிகளில் படிக்கும்போதே ‘நீட்’ பயிற்சி அளிக்க வேண்டும்’ என்றார். திருப்பத்தூர் தனியார் பள்ளி மாணவர் ஜீவானந்தம், ‘பாடப்புத்தகங்களில் இருக்கும் புக் பேங்க் பகுதியை நீக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளை நேரடியாக கேட்காமல் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும்’’ என்றார். ஊரீசு பள்ளி மாணவர் ஐசக் இன்பராஜ், ‘6-ம் வகுப்பு முதல் கணினி பாடத்திட்டம் இருக்க வேண்டும்’ என்றார். சேர்க்காடு பள்ளி மாணவர் தேவேந்திரன், ‘வணிகவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவ கல்வி அளிக்க வேண்டும்’ என்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர்.

ஆம்பூர் ஆனைக்கார் பள்ளி மாணவர் முகமது சித்திக், ‘5-ம் வகுப்பு வரை அரபி மொழியில் படித்தேன். தமிழ் கட்டாயம் என்பதால் படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது’ என்றார். போளூர் அரசுப் பள்ளி மாணவர் சுதர்சனம், ‘கரோனா காலத்தில் பாஸ் ஆனதால் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதில் சிரமம் இருக்கிறது. புரிந்துகொண்டு படிக்கும் வகையில் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும்’ என்றார். முத்துரங்கம் அரசினர் கல்லூரி மாணவி கிரிஜா, ‘அரசு கல்லூரிகளில் வளாகத் தேர்வு நடத்த வேண்டும்’ என்றார். அதே கல்லூரி மாணவர் கணேஷ், ‘மாணவர்களின் பேச்சுத்திறன் அதிகரிக்கும் வகையில் கலந்து ரையாடல் கொண்ட பாடத்திட்டங்களை கொண்டு வரவேண்டும்’ என்றார். ஆற்காடு மகாலட்சுமி கல்வியியல் கல்லூரி மாணவி பிரியதர்ஷனி, ‘மாணவர்களுக்கு பொது அறிவு கல்வி அளிக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, பெற்றோர் தரப்பில் பேசும்போது, ‘‘8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலை வேண்டும். அதுவுரை மொழியறிவு, அடிப்படை கல்வி உள்ளிட்டவற்றை திரும்பத்திரும்ப கற்றுத்தர வேண்டும். 9-ஆம் வகுப்பில் இருந்து மாணவர்களே தேர்வுக்கு தயாராகிவிடுவார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயது 5 என்று இருக்கும்போது எதற்காக மூன்று வயதிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் இந்த நடைமுறையை முற்றிலும் நீக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் இருப்பதால் அதன் மீது பெற்றோருக்கு மோகம் ஏற்படுகிறது’’ என்றனர். இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x