Published : 21 Oct 2022 04:05 AM
Last Updated : 21 Oct 2022 04:05 AM

பள்ளி மாணவர்களுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் | கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியாவில் கல்வி முறைக்கான பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளுக்கான வழிகாட்டியாக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு விளங்குகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று டெல்லியில் தொடங்கி வைத்து பேசியதாவது:

பள்ளி மாணவர்களுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை தயாரிப்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தியாவில் கல்விக் கொள்கைக்கு இன்று முக்கிய நாளாகும். இந்த பாடத்திட்டம் சமமான மற்றும் அணுகக்கூடிய கல்வியாக இருக்கும். மாணவர்களுக்கு முதல் 5 ஆண்டுகளில் இந்த கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

வரும் ஆண்டுகளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை செயல்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். நிகழ்ச்சியில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான அங்கன்வாடி திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து தர்மேந்திர பிரதான் கூறும்போது, “பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இத்திட்டத்தை முன்னோடி திட்டமாக தொடங்க உள்ளன. உத்தராகண்ட் அரசு இத்திட்டத்தை தங்கள்மாநிலத்தின் 4,000 அரசுப் பள்ளிகளில் தொடங்கவிருப்பதை பாராட்டுகிறேன்” என்றார். நிகழ்ச்சியில் கல்வித் துறைஇணை அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, சுபாஷ் சர்க்கார், ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x