Published : 18 Sep 2022 04:25 AM
Last Updated : 18 Sep 2022 04:25 AM

ராகிங் தடுப்பு உறுதிச் சான்றை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் - மாணவர்களுக்கு அறிவுறுத்த யுஜிசி உத்தரவு

சென்னை: ராகிங் தடுப்பு உறுதிச் சான்றை ஆன்லைனில் பதிவேற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் நடைபெறுவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வகுத்து www.ugc.ac.in, www.antiragging.in ஆகிய இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றி ராகிங் நிகழ்வதை உயர்கல்வி நிறுவனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். வழிகாட்டுதல்படி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேலும் ராகிங்கை தடுக்கும் வகையில் ராகிங் தடுப்புக் குழுக்கள், முக்கிய இடங்களில் சிசிடிவி போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி ராகிங் பிரச்சினை எழுவதற்கான அடிப்படை காரணங்களை அடையாளம் காண வேண்டும்.

ராகிங் தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மாணவர் மற்றும் பெற்றோர் ஒவ்வொரு கல்வியாண்டிலும் www.antiragging.in என்ற இணையதளத்தில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் அதே இணையதளத்தில் ராகிங் தடுப்பு உறுதிச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து மாணவருக்கு பதிவு எண்ணுடன் கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும். அதை கல்வி நிறுவனத்தில் உள்ள ராகிங் தடுப்புக் குழு கண்காணிப்பு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களும் ராகிங் தடுப்புக் குழு கண்காணிப்பு அதிகாரியின் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் சேர்க்கை விண்ணப்பத்திலும் இந்த எண் இடம்பெறும் வகையில் ஒரு வரிசையை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகிங்கால் பாதிக்கப்படும் மாணவர்கள் 1800 180 5525 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, helpline@antiragging.in என்ற மின்னஞ்சலிலோ, www.antiragging.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது 98180 44577 என்ற அவசர செல்பேசிஎண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x