Published : 09 Sep 2022 05:04 AM
Last Updated : 09 Sep 2022 05:04 AM
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (செப்.10) தொடங்கி நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. இதையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (செப்.10)தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை முதல் நவ.13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பின் காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரையும், எஸ்சி பிரிவுக்கான கலந்தாய்வு நவ.19, 20-ம் தேதிகளிலும் நடைபெறும்.
நடப்பாண்டு நீட் தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதால் பொறியியல் சேர்க்கை அதிகரிக்கும். கூடுதல் விவரங்களை /www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT