Published : 26 Aug 2022 04:05 AM
Last Updated : 26 Aug 2022 04:05 AM

ஈரோடு: 3 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பிய 60 பழங்குடியின குழந்தைகள்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு மற்றும் குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளி மூடப்பட்டதால், இடைநின்ற 60 மலைக் கிராம பழங்குடியின குழந்தைகள், தொண்டு நிறுவன முயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் பின்புறம் விளாங்கோம்பை எனும் வனக்கிராமம் உள்ளது. இங்கு, ‘ஊராளி’ என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பழங்குடியினக் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளி 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் செயல்பட்ட இப்பள்ளி மத்திய அரசின் உத்தரவால் மூடப்பட்டது.

இதையடுத்து, இப்பகுதி மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டுமானால் 10 கிமீ வனப்பகுதியைக் கடந்து வினோபா நகருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பழங்குடியின குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் இடை நின்றனர்.

அதேநேரம் பெயரளவில் இவர்கள் வினோபா நகர் பள்ளியில் படிப்பதாக பதிவு செய்யப்பட்டது.

மேலும், கரோனா ஊரடங்கு காரணமாகவும் மலைக் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி இடைநின்றனர். இவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க சுடர் தொண்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதையடுத்து, விளாங் கோம்பை கிராமத்தில் இருந்து 30 குழந்தைகளும், குன்றியில் இருந்து 20 குழந்தைகளும், பர்கூர் மலைப்பகுதியில் 10 குழந்தைகளும் என 60 பேர் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.

மலைக் கிராமங்களில் பள்ளி இடைநின்ற மாணவர்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுப்பு நடத்தி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளாங்கோம்பை வன கிராமத்தில் இருந்து வினோபா நகருக்கு மாணவர்கள் சென்று வர வாகன வசதி இல்லாத நிலையில், சுடர் தொண்டு நிறுவனம் தற்காலிகமாக வாகன வசதி செய்து கொடுத்துள்ளது.

இம்மாணவர்கள் கல்வியை தொடர அரசு வாகன வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x