Published : 31 Jul 2022 04:04 AM
Last Updated : 31 Jul 2022 04:04 AM
சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநிலத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.
4 லட்சம் பேர் விண்ணப்பம்
அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை, கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணமும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அதன்படி, தகுதிபெற்ற மாணவர்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை முடித்து, கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் நாளை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT