Published : 14 Jul 2022 05:02 AM
Last Updated : 14 Jul 2022 05:02 AM

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம் | இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் தரவேண்டும் - யுஜிசி

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் வரை மாணவர் சேர்க்கைக்கு உரிய காலஅவகாசம் தரவேண்டும் என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் 10, 12-ம்வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 கட்டங்களாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்ட தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்வு, ஏப்ரல் 26-ல் தொடங்கி ஜூன் 15-ம் தேதி முடிவடைந்தன.

தொடர்ந்து தாமதம்: தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இவை முடிந்தபின் 2 கட்ட தேர்வு முடிவுகளையும் ஒருங்கிணைத்து இறுதி மதிப்பெண்ணை ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடுவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால், சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் நிலவுவதால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலக் கல்வி வாரியங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டன. இதனால், மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை சேர்க்கைக்கு கல்லூரிகள் உரிய காலஅவகாசம் தர வேண்டும் என பல் கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

சிபிஎஸ்இ முதல்கட்ட தேர்வு முடிவுகள் ஏற்கெனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி தற்போது நடந்து வருகிறது. இரு கட்ட தேர்வு முடிவுகளையும் சேர்த்து இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும். இந்த நடைமுறை முடிந்து, பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க இன்னும் ஒரு மாத காலமாகும்.

வாய்ப்பை இழக்க நேரிடும்: இதனிடையே, 2022 - 23 கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் தொடங்கிவிட்டன. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முன்பு பல்கலை. மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை முடிக்கப்பட்டால் சிபிஎஸ்இ மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.

அதனால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் தங்கள் நிறுவனங்களில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இருக்குமாறு உயர்கல்வி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க போதிய அவகாசம் தரப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிபிஎஸ்இ மாணவர்கள் நலன்கருதி தமிழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் சேர்க்கை விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x