Published : 21 Jun 2022 09:59 PM
Last Updated : 21 Jun 2022 09:59 PM
சென்னை: மேம்பாட்டுக் கல்வி, ஆங்கிலக் கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்று பிரிவுகளில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்பை 2023-24 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையால் புதிய எம்.ஏ. படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளன. இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதிகளவிலான மாணவர்களை ஈடுபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.
மேம்பாட்டுக் கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகியவை தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளாக இருந்து வருகின்றன. இதற்கு பதிலாக பொருளாதாரப் பாடத்தையும் இணைத்து, மூன்றையும் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான பாடப் பிரிவுகளாக விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள் 2023-24-ம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மிகையிடங்கள் அடிப்படையில் சர்வதேச மாணவர்களும் இந்தப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் நடைமுறைகள் 2023-ம் ஆண்டு மார்ச்,ஏப்ரல் மாதங்களில் தொடங்கப்பட்டு, ஜூலை 2023-ல் வகுப்புகள் ஆரம்பமாகும். HSEE தேர்வுக்கு பதிலாக, விரைவில் அறிவிக்கப்பட உள்ள நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சான்றுகள் அடிப்படையிலான கொள்கைப் பகுப்பாய்வுகள், சமூகப் பொருளாதார மேம்பாட்டை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, தரவு அறிவியல் மற்றும் நிர்வாகம், பருவநிலை மாற்றம், நிலைத்தன்மை, நகரமயமாக்கல் போன்ற தற்காலத்து பிரச்சினைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தனித்துவ அம்சங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளன.
புத்தாக்க பொருளாதாரம் , நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு , சுகாதாரக் கொள்கை, சுற்றுச்சூழல் மானுடவியல் , பருவநிலைப் பொருளாதாரம் , தொழில்நுட்பம் மற்றும் கொள்கை , கணக்கீட்டு மொழியியல் போன்ற தற்காலத்திற்கு தேவைப்படும் பாடங்களை உள்ளடக்கியதாக எம்.ஏ. படிப்பின் பாடப்பிரிவுகள் சீரமைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT