Published : 11 Jun 2022 06:32 AM
Last Updated : 11 Jun 2022 06:32 AM

தூத்துக்குடி | 1 முதல் 10-ம் வகுப்புகள் ஜூன் 13-ல் தொடக்கம்: பாடப்புத்தகங்களை அன்றே வழங்க ஏற்பாடு

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள கல்வித்துறை ஊழியர்கள்.(வலது) தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள். படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: கோடை விடுமுறைக்கு பின்பு 1 முதல் 10-ம் வகுப்புகள் வரும் 13-ம் தேதி தொடங்குகின்றன.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.

300 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளை நடத்த வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். 100 சதவீதம் தேர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பறைகளில் உள்ள டெஸ்க்குகள், பெஞ்சுகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களை சுத்தம் செய்வதுடன், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் போட வேண்டும் என்றார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தங்கள் மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும் வந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. வகுப்பு தொடங்கும் முதல் நாளே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x