Published : 03 Jun 2022 06:44 AM
Last Updated : 03 Jun 2022 06:44 AM

திருப்பூர் | ஏழாவது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் உடுமலை இளைஞர் வெற்றி

திருப்பூர்: மனம் தளராத தொடர் முயற்சிகளால், சிவில் சர்வீசஸ் தேர்வில் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) வெற்றி பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பொறியியல் பட்டப் படிப்பு (எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்) முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். எனது ஆசிரியர் லெப்டினென்ட் தர் என்பவரின் அறிவுரைப்படி, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தொடங்கினேன். படிப்பதற்கு போதிய நேரமில்லாத சூழல் எழுந்ததால், ஐடி நிறுவன வேலையில் வெளியேறி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் முழு நேரமாக போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினேன். இருப்பினும் தொடர் தோல்விகளே கிடைத்தது.

தற்போது 7-வது முறையாக எழுதி, 503-வது இடம் பிடித்து குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். பெற்றோர் கவிதா, செல்வராஜ் ஆகியோர் அளித்த தொடர் ஊக்கம்தான் தொடர்ந்து போட்டித் தேர்வை எழுதத் தூண்டியது. தேர்வு குறித்து தெளிவான புரிதல், குழுவாக படித்தல், தினசரி செய்திகளை ஆழமாக வாசிப்பது மற்றும் அரசுப் பள்ளியில் பயிற்சி ஆகியவைஎனக்கு பக்கபலமாக இருந்தன.

வெற்றி பெற்றவர்களைவிட தோல்வி அடைந்தவர்களுக்கு நாம் ஆறுதலாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தால் மேலும் மிளிர்வார்கள். மனம் தளராத முயற்சி வெற்றியை தரும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x