Published : 27 Mar 2022 05:25 AM
Last Updated : 27 Mar 2022 05:25 AM
சென்னை ஐஐடி-ல் கற்பிக்கப்படும் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜுன் 12-ம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 27-ம்தேதிக்குள் ஆன்லைனில் விண் ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐஐடி-க்களில் ஒன்றான சென்னை ஐஐடி-ல், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் வளர்ச்சிக் கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகிய 2 பாடப் பிரிவுகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்புகள் 2006-ம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 58 இடங்கள்
ஒவ்வொரு எம்.ஏ. படிப்பிலும் தலா 29 இடங்கள் வீதம், மொத்தம் 58 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும்.
சென்னை ஐஐடி மத்திய அரசுகல்வி நிறுவனம் என்பதால், மத்தியஅரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன்படி, நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 3 மணி நேரம் கொண்ட நுழைவுத்தேர்வில் பகுதி-1, பகுதி-2 என இரு தேர்வு கள் நடத்தப்படும்.
பகுதி-1ல் ஆங்கிலம், ஆராயும் திறன், கணிதத் திறன், பொது அறிவு ஆகிய பகுதிகளில் இருந்துஅப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். பகுதி-2 ஏதேனும்ஒரு பொது தலைப்பில் கட்டுரைஎழுதும் வகையில் அமைந்திருக் கும்.
இந்நிலையில், 2022-2023-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகடந்த மார்ச் 9-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27-ம் தேதி யாகும்.
ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://hsee.iitm.ac.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக் கட்டணம் ரூ.2,400. எஸ்.சி., எஸ்.டி.வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணம் ரூ.1,200. மேலும், சேவைக் கட்டணமாக கூடுதலாக ரூ.40 செலுத்த வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கு உரிய பாடத் திட்டம், குறைந்தபட்ச தகுதிமதிப்பெண், தேர்வு மையங்கள்,ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐஐடி மானிடவியல் மற்றும் சமூகஅறிவியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT