Published : 29 Aug 2017 10:51 AM
Last Updated : 29 Aug 2017 10:51 AM
அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களில் கணிசமானோரின் தேர்வாக இருப்பது வங்கி வேலை. முன்பு பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் எனப்படும் எழுத்தர்களும் அதிகாரிகளும் (Probationary Officers) பி.எஸ்.ஆர்.பி. என்ற வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டுவந்தனர். தற்போது ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்பு மூலமாக எழுத்தர்களும் வங்கி அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் ஊழியர்களையும் அலுவலர்களையும் தானே தேர்வு நடத்தித் தேர்வுசெய்துகொள்கிறது. மற்ற அனைத்து அரசு வங்கிகளிலும் எழுத்தர்களும் அதிகாரிகளும் சிறப்பு அதிகாரிகளும் (தொழில்நுட்பப் பிரிவு) ஐ.பி.பி.எஸ். அமைப்பு மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வங்கிகளில் அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் அதிக எண்ணிக்கையில் வந்த வண்ணம் உள்ளன. தனியார்துறை வங்கிகளின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நேரடி அதிகாரி நியமனங்களை மேற்கொண்டு வருகின்றன.
அது உண்மை அல்ல!
வங்கி அதிகாரி பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். பி.காம். படித்தால் எளிதில் வங்கி அதிகாரி ஆகிவிடலாம் என்ற தவறான கருத்து நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஆனால், அது உண்மை அல்ல! ஐ.பி.பி.எஸ். அமைப்பு நடத்துகின்ற போட்டித் தேர்வில் வெற்றிபெற வேண்டும். அவ்வளவுதான்.
கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.பி.பி.எஸ். தேர்வு முடிவுகளை ஆய்வுசெய்து பார்த்தால், அறிவியல் பட்டதாரிகளே வங்கித் தேர்வில் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று வருகிறார்கள். அவர்களில் தாவரவியல், விலங்கியல் பட்டதாரிகளும் அடக்கம். எனவே, எந்தப் பாடமாக இருந்தாலும் சரி, வங்கி அதிகாரி தேர்வுக்கு அடிப்படைத் தேவை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
ஆன்லைன் வழித் தேர்வுகள்
வயது குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 30. எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 35, ஓ.பி.சி. பிரிவினருக்கு 33, மாற்றுத் திறனாளிகளுக்கு 40. வங்கி அதிகாரிகள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு வகைத் தேர்வுகள் இடம்பெறும்.
மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு முதல் நிலைத்தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் வழியிலான இத்தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். தேர்வுக்கு ஒரு மணி நேரம் கொடுக்கப்படும். முதல்நிலைத் தேர்வில் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி பெற்றாக வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும்.
மெயின் தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதுவும் ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும். தேர்வு நேரம் 3 மணி நேரம். இதோடு கூடுதலாக ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் இடம்பெற்றிருக்கும். கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் ஆகிய 2 கேள்விகளுக்கு 25 மதிப்பெண். இத்தேர்வுக்கு அரை மணி நேரம் கொடுக்கப்படும்.
இதற்கும் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும். இரு தேர்வுகளிலுமே தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் போடப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் மதிப்பெண் கழித்துவிடுவார்கள். அதாவது 4 கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் போய்விடும். மெயின் தேர்வில் தேர்ச்சிபெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
இலவசப் பயிற்சி
வரும் நிதி ஆண்டில் (2018-19) அரசுத் துறை வங்கிகளில் 3,562 அதிகாரிகள் நேரடி நியமன முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வுக்கு ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் (www.ibps.in. ) செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வெழுதும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கும் (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் சமூகத்தினர் முதலானோர்) அரசு வங்கிகள் சார்பில் இலவசமாகப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த இலவசப் பயிற்சி பெற விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே, அதுகுறித்து தவறாமல் குறிப்பிட வேண்டும்.
வங்கி அதிகாரிகளுக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.43 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். பதவி உயர்வு வாய்ப்புகள் அதிகம். உதவி மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர், தலைமை மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், பொது மேலாளர், செயல் இயக்குநர், தலைவர், நிர்வாக இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம். இளம் வயதில் அதிகாரியாகப் பணியில் சேருவோர் வங்கியின் தலைமை பதவியான தலைவர், நிர்வாக இயக்குநர்வரை முன்னேற முடியும்.
முக்கிய நாட்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - செப்டம்பர் 5
இலவசப் பயிற்சிக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - செப்டம்பர்
இலவசப் பயிற்சி - செப்டம்பர் 23 முதல் 29 வரை
முதல்நிலைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - செப்டம்பர்
ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு - அக்டோபர் 7, 8, 14, 15
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் - அக்டோபர்
மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - நவம்பர்
ஆன்லைனில் மெயின் தேர்வு - நவம்பர் 26
மெயின் தேர்வு முடிவுகள் - டிசம்பர்
நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - 2018 ஜனவரி
நேர்முகத் தேர்வு - ஜனவரி, பிப்ரவரி
இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு, பணி ஒதுக்கீடு - ஏப்ரல்
மெயின் தேர்வில் என்ன கேட்பார்கள்?
1. நுண்ணறிவு, காரணமறிதல் கணினி அறிவு - 45 கேள்விகள்
2. பொருளாதாரம், வங்கியியல் - 40 கேள்விகள்
3. பொது ஆங்கிலம் - 35 கேள்விகள்
4. டேட்டா அனலசிஸ், இன்டர்பிரட்டேஷன் - 35 கேள்விகள்
வங்கிகள் வாரியாகக் காலியிடங்கள்
1. அலகாபாத் வங்கி - 235
2. ஆந்திரா வங்கி - 625
3. பேங்க் ஆஃப் இந்தியா - 200
4. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 100
5. கனரா வங்கி - 1350
6. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 100
7. கார்ப்பரேஷன் வங்கி - 100
8. யூகோ (Uco) வங்கி - 530
9. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 322
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT