Published : 29 Aug 2017 10:52 AM
Last Updated : 29 Aug 2017 10:52 AM

மரபு மருத்துவம்: ‘நீட்’ எழுதாமலும் மருத்துவர் ஆகலாம்

நீ

ட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக மாணவர்களைக் கைவிட்டுவிட்டது. இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு கிடைத்துவிடாதா என்று ஆதங்கத்தோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், தங்களுடைய மருத்துவக் கனவு கானல் நீராகிப் போனதால் விரக்தி அடைந்துள்ளனர் .ஆனால், அதற்காக முற்றிலும் சோர்ந்துவிடத் தேவையில்லை.

எது தகுதி?

தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டித்தான் தேசியத் தகுதி, நுழைவுத் தேர்வான நீட் நடத்தப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், எது தகுதி என்பதுதான் கேள்வி. “கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றிவிட்டுச் சென்னை திரும்பினேன்.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து, பின்னர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் படித்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலேயே 25 ஆண்டுகள் மருத்துவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தவன் நான். என்னைப் போல தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை படித்த லட்சக்கணக்கான மாணவர்களில் பெரும்பாலோர் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களே. நாங்கள் யாரும் நீட் எழுதவில்லை!

நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மத்திய அரசின் பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு சவாலாக இருக்கக் காரணம், அது உயர்ந்த தகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதல்ல. அது முற்றிலும் புதிய பாடத்திட்டம் என்பதே” என்கிறார் மனநல மருத்துவர் டி.வி. அசோகன்.

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு வாய்ப்பு என சமூகநீதிக்கு மட்டுமல்லாமல் அரசு சார்ந்த மருத்துவ சேவை, ஆரம்ப சுகாதார மையங்களின் செயல்பாடு என அனைவருக்குமான மருத்துவ சேவைக்கும் பங்கமாக முடியும் என மருத்துவர் அசோகன் உட்படப் பலர் எச்சரிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இச்சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் கேள்வி, ‘அடுத்தது என்ன?’

ஏன் இந்த இடைவெளி?

எப்படி ஒரு தேர்வு முறையை வைத்து மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்க முடியாதோ, அதைப் போலவே அலோபதி என்ற ஒரு மருத்துவ முறை மட்டுமே ஒட்டுமொத்த மருத்துவம் ஆகிவிடாது. தமிழகத்தில் உள்ள 29 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவக் கல்லூரி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி – மருத்துவமனை, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை வைத்தியக் கல்லூரி உட்பட 6 இந்திய மருத்துவ முறை சார்ந்த ஆயுஷ் கல்லூரிகள் உள்ளன. இவற்றைத் தவிர 20 சுயநிதி ஆயுஷ் கல்லூரிகளும் உள்ளன.

ஆங்கில மருத்துவ முறையான அலோபதிக்கு அடுத்தபடியாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 1995-லிருந்து செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையானது 2003-ல் ஆயுஷ் எனப் பெயர் மாற்றப்பட்டது. இத்துறை 2014-ல் ஆயுஷ் அமைச்சகமாக மாற்றப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அலோபதிக்கும் ஆயுஷுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. 2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் அலோபதிக்கு 37,061 கோடி நிதி ஒதுக்கப்பட்டபோது, ஆயுஷுக்கு 1,326 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அலோபதிக்கான நிதி ஒதுக்கீட்டோடு ஒப்பிட்டால் 3.58 சதவீதம் மட்டுமே ஆயுஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசுத் தரவுகளின்படி இந்திய மக்கள்தொகையில் 28 சதவீதத்தினர் ஏதாவது ஒரு வகை ஆயுஷ் சிகிச்சையைப் பெற்றுவருகிறார்கள். அதிலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துபவர்கள் 22 சதவீதத்தினர். அதேநேரம் தமிழகத்தில் உள்ள 1,456 ஆயுஷ் மையங்களில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

திட்டமிட்ட அவதூறு

அவசர சிகிச்சைகளுக்கு ஆயுஷ் முறைகளை நாட முடியாது என்ற எண்ணத்தாலும் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாலும் ஆயுஷ் மருத்துவத்தைப் படிக்கவும், அதனால் பயன்பெறவும் மக்களிடையே ஒரு தயக்கம் இருக்கிறது. ஆனால், “மேற்கத்திய நாடுகளின் பெருமருந்து உற்பத்தி நிறுவனங்கள் உலக மருத்துவச் சந்தையைக் கையகப்படுத்த முயல்கிறார்கள். பன்முகப் பார்வையில் மருத்துவத்தை அணுகும் இந்தியச் சந்தையை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இந்திய மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்புகிறார்கள்” என ஹோமியோபதி ஆய்வுக்கான மத்தியக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் மன்சந்தாவின் எச்சரிக்கையை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உதவித்தொகையுடன் வேலை

“கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி சித்த மருத்துவம் ஆதார அடிப்படையிலான மருத்துவ முறை என நிறுவிவருகிறோம். இதன் மூலம் சித்த மருத்துவம் போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சைகளின் மூலம் நோய் குணமாகும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டைக் களைந்துவருகிறோம்.

ஆயுஷ் மருத்துவத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் அரசும் தற்போது உற்சாகமாக மேற்கொண்டுவருவதால் கடந்த ஆண்டைவிடவும் அதிக எண்ணிக்கையில் சித்த மருத்துவத்தைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். கடந்த ஆண்டு 1,000 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு 5,000 விண்ணப்பங்கள்வரை பெறப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 31வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதால் நீட் தீர்ப்பால் சோர்ந்துபோகாமல் பல மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தைச் சிறப்பாகப் படிக்கும்பட்சத்தில் மாநில, மத்திய அரசுகளின் உதவித்தொகை ரூ.35 ஆயிரம்வரை பெற்று முதுகலைப் படிப்பைப் படித்துக்கொண்டே ‘ரிசர்ச் ஆபிசர்’ பொறுப்பும் வகிக்கலாம். முன்பைக் காட்டிலும் சித்த மருத்துவத்துக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே இதுவரை பணியமர்த்திவந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எம்.ஆர்.பி.யும் சித்த மருத்துவர்களைப் பணியமர்த்துகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் 103 சித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வி. விக்ரம் குமார்.

விரைவில் ஆயுர்வேத நாள்

“ஆயுஷ் மருத்துவ முறைகளில் ஆயுர்வேத மருத்துவத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாகர்கோவிலில் ஆயுர்வேத அரசுக் கல்லூரியும் சென்னையில் மூன்று தனியார் ஆயுர்வேதக் கல்லூரிகளும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேத மருத்துவம் அதிகம் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதில் முதுகலைப் படிப்பு படிக்க கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்.

தேசிய ஆயுர்வேத நாளை கொண்டாடுவதற்காக கோரிக்கை முன்வைத்துள்ளோம். இந்தியாவைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலும் ஆயுர்வேதத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நாகர்கோவில் அரசு ஆயுர்வேதக் கல்லூரியில் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடக்கவிருப்பதால், அதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா.

அடுத்த ஆண்டு முதல் ஆயுஷ் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆயுஷையும் அபகரிக்க விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகக் கல்வித் துறைக்கு உள்ளது. இதற்கிடையே நமது மரபு மருத்துவ முறைகளைக் கற்றாலும் சிறந்த மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு அதிகமாகவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x