Published : 25 Jul 2017 10:57 AM
Last Updated : 25 Jul 2017 10:57 AM
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாடத் திட்டச் சீரமைப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார் பாலினச் சமத்துவத்துக்காகப் போராடிவரும் மதுரையைச் சேர்ந்த கோபி ஷங்கர். இந்தக் கூட்டத்தில் பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு (LGBTQIA+) தொடர்பாகத் தன்னுடைய ஆலோசனைகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் இவர். இது இந்திய கல்வி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்துக்கான முக்கிய நகர்வாகும்.
முதல் தமிழ் குரல்
ஸ்பெயினில் சமீபத்தில் நடந்த பாலின ஒருங்கிணைவு உச்சி மாநாட்டில் தென்னிந்தியாவிலிருந்து முதன் முதலாகப் பங்கெடுத்தார் கோபி ஷங்கர். ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் நடத்தப்பட்ட இந்த விழாவில் 12 ஐரோப்பிய ஐக்கிய ஒன்றியத் தலைவர்களோடு கோபியும் உரையாற்றினார் . கோபியின் உரை ஜூன் 29 தேதி பொதுப் பார்வைக்காக ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.
கடந்த 2016-ல் இளம் சேவகர்களுக்கான காமன்வெல்த் விருது பெற்ற கோபி ஷங்கர், ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் 4 தலைப்புகளில் உரையாற்றினார் . ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் ஒலித்த முதல் தமிழ் குரல் என்கிற பெருமை மட்டுமல்லாமல், ஸ்பெயினின் பாடத் திட்டத்தில் மாற்றுப் பாலினத்தவர் குறித்த கல்வி மற்றும் அவர்களின் உரிமை குறித்தும் பேசியவர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
தற்போது தமிழக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (state council for research and training) குழுவிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். இது குறித்து பேசுகையில்,“பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு தொடர்பான புரிதலை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காக ஒரு முயற்சி எடுக்க இருக்கிறோம்.
இந்தியாவிலேயே முன்மாதிரியாகத் தமிழகத்தில் இப்படி ஒரு முயற்சி நடப்பது பாராட்டுக்குரிய விஷயம். பாட வரையறைக் குழுவோடு பேசுவதை எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறேன்” என்கிறார் கோபி ஷங்கர்.
பாடங்களைத் தவிர்க்கும் ஆசிரியர்கள்
மேலும் அவர் கூறுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் இறுதியில் ஆசிரியருக்கான ஒருங்கிணைவில் பேச இருக்கிறேன். மதிப்பெண் பட்டியலின் வடிவமாகத்தான் மாணவர்களை நாம் பார்க்கிறோம். ஒரு குழந்தைக்கு உலக வரைபடத்தில் இந்தியா இந்த இடத்தில் இருக்கிறது என்று காட்டுவதற்கு முன், தன் உடலில் இன்னின்ன பாகங்கள் இந்த இடத்தில் இருக்கின்றன. அது இன்னின்ன பணிகளைச் செய்கின்றன என்று தெரிந்திருக்க வேண்டும். எத்தனை பெற்றோர் மாதவிடாய் குறித்து அவர்களின் பெண் குழந்தைகளிடம் பேசுகிறார்கள்?
ஒரு மாணவரை அணுகும் முறையிலேயே பல ஆசிரியர்களுக்குச் சரியான புரிதல் இல்லை. இது ஒரு நல்ல முயற்சியின் தொடக்கம். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளின் மூலமாகத்தான் பொதுச் சமூகத்தில் பல மாற்றங்களை உண்டாக்க முடியும். ஏற்கெனவே நம்முடைய பாடத் திட்டத்தில் இருக்கும் உடல் பாகங்கள் குறித்த பாடத்தைச் சொல்லித் தராமல் தவிர்த்துவிடுகிறார்கள் பல ஆசிரியர்கள். அதைத் தவிர்க்காமல் மாணவர்களுக்கு நடத்த வேண்டும்” என்கிறார்.
பாடப் பிரிவே வேண்டும்
`ஜென்டர் சயின்ஸ்’ என்று ஒரு பாடப் பிரிவு அவசியம் என வலியுறுத்துகிறார் கோபி. மொழி, அறிவியல் பாடங்களுக்கு இணையான முக்கியத்துவம் அதற்கு அளிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒருவர் ஆண், பெண், இடையிலிங்கத்தவர் (Inter Sex) ஆகவோதான் பிறக்க முடியும். இதைத் தகுந்த முறையில் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இது புரியாமல்தான் ஆண்டுக்கு 10 ஆயிரம் இடையிலிங்கமாக பிறக்கும் குழந்தைகள் மரணமடைகின்றனர் என்கின்றது ஐ.நா.வின் புள்ளிவிவரம்.
ஸ்பெயின் நாட்டுக்கும் பரிந்துரை
மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் `இன்குளுசிவ் கேம்பஸ்’ என்றே இருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்காகப் பல ஆயிரம் யூரோக்களைச் செலவுசெய்து தனிப் பாதைகளை அமைத்திருக்கின்றனர். “சாதாரணமாக இருக்கும் 1000 பேருக்கு மாற்றுத் திறனாளி ஒருவரை ஈடாக நாங்கள் நினைக்கிறோம் என்கிறார் அந்த நாட்டின் அதிபர். மாற்றுத் திறனாளிகளிலேயே மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர்.
கல்லூரிகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு (LGBTQIA+) சிறப்பான பல கொள்கை முடிவுகளை அந்நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு மாற்றுப் பாலினத்தவர்களை கிண்டல்செய்வது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கிறது. நாட்டில் கல்விக் கூடங்களில் பணியிடங்களில் அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுறார் கோபி.
“ஒருசில ஐரோப்பிய நாடுகளில் இல்லாத சிறப்பை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் மிகவும் கவனமாக ஆண், பெண் பேதமின்றி இதை நிறைவேற்றியிருக்கிறார். அங்கு ஆண், பெண் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கின்றனர். ஐரோப்பாவிலேயே இண்டர்செக்ஸ் பற்றிய புரிதல் இல்லையே தவிர ஒதுக்கும் போக்கு இல்லை. அதனால் அந்தப் பாடத் திட்டங்களிலேயே இந்தப் புரிதலை ஏற்படுத்தும் ஆலோசனைகளை ஸ்பெயினில் நடந்த உச்சி மாநாட்டிலேயே நான் தெரிவித்தேன்” என்கிறார் அவர்.
உடல் குறித்த புரிதல்
“ராக்கெட் சயின்ஸ் பற்றிப் பேசுவதற்கு முன் நம் உடல் குறித்துப் பேசவேண்டும். மாதவிடாய் குறித்துச் சரியான புரிதல் இல்லாத பெண்களும் இருக்கிறார்கள். உடல் குறித்த அறியாமையை மாணவர்களிடமிருந்து போக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும்.
இவர்களைவிட ஆசிரியர்களுக்கு முதலில் விழிப்புணர்வு வர வேண்டும். அதற்கான சிறிய முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு நாட்டுக்கு இறையாண்மை எப்படி முக்கியமோ அதைப் போன்றே ஒவ்வொருவரின் உடலுக்கும் ஓர் இறையாண்மை இருக்கிறது. அது காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார் கோபி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT